(ப-பொ-ரை.)காலனானவன் ஒருவன் இறுதிக்காலம் வந்து விட்டால், அழுதாலும் விட்டுப் போகின்றவனல்லனன், ஓ என அலறிக் கூவினுங் கேட்டிரங்குகின்றவனல்லன், எழுந்தெங்கேனுஞ்செல்வதற்கும் விடாதவன், இழந்து வலியற்றிருப்போர் நின்னையே குலதெய்வமாக வழிபடுவோம் என்று வணங்கவும் விட்டுச் செல்கின்றவனல்லன், இக்காலன் என்ன தன்மையனாயிருக்கின்றான், ஆதலின், காலனது வரவுக்கோர் உபாயஞ்சூழாது, தவம்புரியாது வீணாட் கழித்துக் கொண்டிருப்பது தகாத செய்கை. (க-து.) காலனைக் கடக்க விரும்புவோர் வாணாளை வீணாக்காமல் விரைவாகத் தவ முயலவேண்டும். என்னே :ஏகாரம் ஐயப் பொருட்டு, காலன் - ஒன்றையுங் கருதாதுகுறித்த காலத்தில் உயிரைக் கொண்டுபோகின்றவன். தவம் - மனம் பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயிலில் நிற்றலும், மாரியிலும் பனியிலும் நீரில் நிற்றலு முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றால் தம் முயிர்க்கு வருந் துன்பங்களைப் பொறுத்துப் பிறவுயிர்களைக் காத்தல். இனி இச்செய்யுளில் ‘காலநீடோரான்' என்ற பாடங்கொண்டு வேறு பொருள்கூறுவது முண்டு. அதனை அடியிற் காண்க. வேறுவிதமா யுரைக்கப்படுவது (இ-ள்.) ஈடு அற்றார் - தனக்கு ஒப்புவமை யில்லாத ஏழைகள், அழ - வறுமைத் துன்பத்தால் அழுதுகொண்டிருக்க, போகான் - போய் யாதுங் கேளான், அஞ்சான் - அவர்களுக்குத் தீமை செய்தற்கு அஞ்சான், அலறினால் - இடுக்கண்நேரிட்டு அவர்கள் கூவியழுதால், கேளான் - அதற்குச் செவிசாயான்; எழப்போகான் - அவ்விடுக்கணினின்றும் அவர் நீங்கியெழும்படி போய்ப் பாரான்; தொழ - ஏழைகள் வணங்கும்படி, என்றும் - எப்பொழுதும், போகான் - வெளியிற் செல்லான், என்னே - யாது நினைந்தோ, இ காலம் நீடு - இந்தக்காலம் வீணே கழிதலை, ஓரான் - ஆராயாமல், தவம் முயலான் - தவமுயற்சியுஞ் செய்யாமல், கொன்னே - வீணாக, இருத்தல் - உயிர்வாழ்ந்து கொண்டிருத்தல், குறை - குற்றமாகும். (க-து.) முடிசார்ந்த மன்னனும் தன் வாழ்நாட் காலத்திலேயே அருமையானவற்றைச் செய்தல் வேண்டற்பாலது.
|