அரசன் புறத்தே வருங் காலங்களின் மட்டுமே ஏழைகள் அவனைக் காணும் வாய்ப்புப்பெற்று வணங்கித் தத்தங் குறைகளைக் கூறிக்கொள்வாராகலின், அங்ஙனம் அவர்தங் குறைகளைக் கேட்டுக் களைதற்கு இடம் வைத்துக் கொள்ளானென்றதற்குத் ‘தொழப் போகா' னெனப்பட்டது.ஆண்டுமிகுதியாதலை இங்குக் ‘கால நீடு' என்றார்.ஈடு : இடு என்னும் முதனிலை யடியாகப் பிறந்த பெயர்.நீடு : காலத்தின்மேனின்ற முதனிலைத் தொழிற்பெயர்.கொன் : இடைச்சொல். தவமுமென எச்ச வும்மை விரித்துரைக்க. (37) 38. எழுத்தினா னீங்காதெண் ணாலொழியா தேத்தி வழுத்தினான் மாறாது மாண்ட - ஒழுக்கினால் நேராமை சால வுணர்வார் பெருந்தவம் போகாமை சாலப் புலை. (இ-ள்.) சால உணர்வார் - அறிவு நூல்களை மிகவும் உணர்ந்தவர், எழுத்தினால் நீங்காது - மந்திர எழுத்தை உருச்செய்தலினின்று நீங்காமலும், எண்ணால் ஒழியாது - அகநினைவால் எண்ணுதலினின்று ஒழியாமலும், ஏத்தி வழுத்தினால் - புகழ்ந்து வணக்கவுரை கூறுதலினின்று, மாறாது - மாறாமலும், மாண்ட ஒழுக்கத்தினால் - சிறந்த நல்லொழுக்கத்தில், நேராமை - சேராமையும், பெரு தவம் - பெரிய தவவழியில், போகாமை - செல்லாமையும், சால புலை - மிகவும் இழிவாம். (ப-பொ-ரை.) இறப்பும் பிறப்புமாகிய துன்பம் கல்வியறிவினளவே நீங்காது, தியான அளவிலே நீங்காது, துதிக்குந் தோத்திரத்தினாலும் நீங்காது, இவை முதலாகிய மாட்சிமைப் பட்ட ஒழுக்கங்களினாலேயும் அவை தீர்த்துப் பேரின்பம் வாயாமை முற்றுங் கண்ட துறந்தோரது மாதவத்தை அடையாதிருத்தல் மிக்க அறியாமையாம். (க-து.) உணர்ந்தோரெல்லாரும் ஒழுக்கமுந் தவமுங் கெட்டு வெறும் பொருளற்ற வழிபாடுகள் செய்தல் பெரிதுந்தவறாகும். எழுத்தினால் முதலியன வேற்றுமை மயக்கம்.நேராமையும் போகாமையுமென உம்மை விரித்துக்கொள்க.புலை : பண்புப் பெயர்; ஐ : பகுதிப் பொருள்விகுதி.எழுத்து - இது கருவியாகு.
|