பக்கம் எண் :

4

‘என்றும் வழிவந்த ஆர் பூங்கோதாய்' என்று கூட்டி, ‘எப்பொழுதும், நல்ல குடியிற் பிறந்த தேன் நிறைந்த மலரையணிந்த கூந்தலையுடையாய்' எனலுமாம். செல்லல் - யாவரும் ஒப்புக்கொள்ளல். பூங்கோதாய் : மகடூஉ முன்னிலை. கூற்றம் - கூறு என்னும் தொழிலடியாகப் பிறந்த பெயர்ச்சொல். வள்ளன்மை, இதன்கண் அல் பகுதிப்பொருள் விகுதி; வழி வந்தார் இரண்டனுள் முன்னது‘முற்றெச்ச' மெனவும், பின்னது ‘வினையாலணையும் பெய'ரெனவுங் கொள்க. வழி - உயர்குடி, ஏகாரம் : பிரிநிலை.

(1)

2. கொலைபுரியான் கொல்லான் புலான்மயங்கான் கூர்த்த
அலைபுரியான் வஞ்சியான் யாதும் - நிலைதிரியான்
மண்ணவர்க்கு மன்றி மதுமலிபூங் கோதாய்
விண்ணவர்க்கு மேலாய் விடும்.

(இ-ள்.) மதுமலி பூ கோதாய் - தேன் நிரம்பிய பூவையணிந்த கூந்தலையுடையவளே!, கொலை புரியான் - கொலைத் தொழிலை விரும்பான், கொல்லான் - ஏதோருயிரையுங் கொல்லான், புலால் மயங்கான் - புலாலை அறிவுகலங்கித் தின்னான், கூர்த்த - மிக்க, அலை - அலைத்தற்றொழிலை, புரியான் - பிறர்க்குச் செய்யான், வஞ்சியான் - எவரையும் வஞ்சனை செய்யான், யாதும் - சிறிதும், நிலை திரியான் - நிலைவழுவான் ஆன ஒருவன், மன்னவர்க்கும் அன்றி - மண்ணுலகத்தார்க்கும் அல்லாமல், விண்ணவர்க்கும் - தேவர்க்கும், மேல் ஆய்விடும் - மேலானவனாய் விடுவான்.

(ப-பொ-ரை.) தேன் பொழியும் பூவை யணிந்த கூந்தலையுடையாய்! பிறர் புரியுங் கொலைத்தொழிலை விரும்பாதவனும், கொல்லாதவனும், தசையை அறிவு மயங்கித் தின்னாதவனும், மிகுந்த வருத்துந் தொழிலைச் செய்யாதவனும், பொய்யொழுக்கமில்லாதவனும், யாது காரணம் பற்றியும் தன்னிலைமையினின்று விலகாதவனும், பூவுலகத்தாரது வணக்கத்துக் குரியனாவதுடன் வானுலகத்தார் வணக்கத்துக்கும் உரியவனாவது திண்ணம்.

(க-து.) கொலை விரும்பாமை முதலிய ஆறு நல்லியல்புகளையுமுடையவன் மக்கட்குந் தேவர்க்குந் தலைவனாவான்.

‘கொலைபுரியான்' முதலிய அறுதொழிலுக்கும் வினைமுதல் ஒருவனே யாதலின். பெயர்ச்செவ்வெண். கொலைபுரியான்