பக்கம் எண் :

40

சேராமலும், பிறர் பால் - அயலார் பால், புல்லான் - இணங்காமலும், புலால் மயங்கல் - ஊனுண்ணுதலை, செல்லான் - மேற்கொள்ளாமலும், குடிபடுத்து - தனது குடும்பத்தை நன்னிலைமையில் வைத்து, கூழ் ஈந்தான் - பிறர்க்கும் உணவு அளிப்பவன், மண் ஆண்டு - உலகத்தை அரசாண்டு, கொல் யானை ஏறி - கொலைபயிலும் யானை மேலேறி, அரசு - ஏனை அரசர்களை, அடிப்படுப்பான் - தனக்கு அடங்கச் செய்பவனாவான்.

(ப-பொ-ரை.) பிறிதோருயிரைக் கொல்லாது, கொல்லுதற்குடன்படாது, கொல்லுவா ரினத்தைச் சேராது, பிறர் மனையாளை விரும்பாது, ஊனுண்டலோடு, கலவாது,பிறருடைய குடிகளை நிறுத்திக் கூழை யீந்தவன் கொல்யானையேறி மண்ணையாண்டிடப்படுவன்.

(க-து.) கொல்லாமை முதலியன உடையான் உலக முழுவதும் அரசாளு நிலைமையை யடைவா னென்க.

ஏறி யென்றது, ஏறிப் போர் செய்தற்குறிப்பினது. மண் : கருவியாகுபெயர். அரசு : பண்பாகுபெயர். படுத்து, படுப்பான் : பிறவினை.

(42)

43. சூதுவவான் பேரான் சுலாவுரையான்யார்திறத்தும்
வாதுவவான் மாதரார் சொற்றேறான் - காதுதாழ்
வான்மகர வார்குழையாய் மாதவர்க் கூணீந்தான்
தான்மகர வாய்மாடத் தான்.

(இ-ள்.) காது தாழ் - காதின்கண் தொங்குகின்ற, வான் - பெரிய, மகரம் - மகரமென்னும் மீன்போன்ற, வார் குழையாய் - நீண்ட குண்டலங்களையணிந்த பெண்ணே!, சூது உவவான் . கவறாடலை விரும்பாமலும், பேரான் - நன்னிலைமையிலிருந்து நீங்காமலும், சுலாவு உரையான் - பிறர் நெஞ்சங் கலங்கும்படியான சொற்களைச் சொல்லாமலும், யார் திறத்தும் - யாரிடத்திலும், வாது உவவான் - வாதுபேசுதலை விரும்பாமலும் மாதரார் சொல் - மகளிர் மழலைகளை, தேறான் - நம்பாமலும், மாதவர்க்கு - பெருந்தவத்தினர்க்கு, ஊண் ஈந்தான் - உணவு கொடுத்தவன், மகரவாய் . சுறாமீன் போன்ற உருவமைக்கப்பட்ட தோரண வாயிலையுடைய, மாடத்தான் - மாளிகையிடத்திலிருப்பவனாவான்.