பக்கம் எண் :

42

(க-து.) பொய்யாமை முதலிய உடையவன் பெருமையும் புகழும் ஐம்புலவின்பங்களும் நுகரும் அரசனாவான். வழி சீத்தல், வரும் வழியைத் துப்புரவு செய்தல்; பாத்து - ஐம்புலப்பகுப்புகள். ஏத்து : முதனிலைத் தொழிற் பெயரென்க. வால் - வெண்மை, தூய்மைக்கானது.

(44)

45. இழுக்கா னியனெறி யின்னாத வெஃகான்
வழுக்கான் மனைபொருள் வௌவான் - ஒழுக்கத்தால்
செல்வான் செயிரிலூ ணீவா னரசாண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து

(இ-ள்.) இயல் நெறி - வழிபாட்டு நெறியிலிருந்து, இழுக்கான் - வழுவாமலும், இன்னாத வெஃகான் - துன்பந்தரும் தீய செயல்களை விரும்பாமலும், மனை வழுக்கான் - இல்லற வாழ்க்கையினின்று தவறாமலும், பொருள் வௌவான் - பிறர் பொருளைக் கவராமலும், ஒழுக்கத்தால் செல்வான் - நன்னடக் கையிலொழுகி, செயிர் இல் ஊண் - குற்றமில்லாத உணவை, ஈவான் - விருந்தினர் முதலானவர்கட்குக் கொடுப்பவன், அரசு ஆண்டு - அரசாட்சி செய்து, விரைந்து விடுப்பான் - பகைவர்கள் விரைவாய் நீங்கும்படி, வெல்வான் - அவர்களை வெற்றி கொள்வான்.

(ப-பொ-ரை.) தானொழுகுநெறியைத் தப்பாது பிறர்க்கின்னாதனவற்றைச் செய்ய விரும்பாது, பிறன் மனை பிழையாது, பிறர் பொருள் வௌவாது தானொழுகுங்கா லொழுகி, குற்றமில்லாத வுணவினை யீவான், அரசாண்டு பகைவரை விரைந்து நீக்கி வெல்வான்.

(க-து.) ஒழுக்கம் வழுவாமை முதலியன உடையவன் உலகத்திற் பலரையும் வென்று அரசனாவான். மேலே ‘ஒழுக்கத்தால் செல்வா' னென்று வருதலின், ‘இயனெறி' யென்பது வழிபாட்டு நெறியென் றுரைக்கப்பட்டது. மனை : ஆகுபெயர். ஒழுக்கத்தால் : வேற்றுமை மயக்கம். விடுப்பான் : பானீற்று வினையெச்சம். இன்னாத: இன்னா என்னும் பகுதியடியாகப் பிறந்த பலவின் படர்க்கைப்பெயர்.

(45)