பக்கம் எண் :

47

அறநூல் வழக்கெனவுங் கூறுப. எள் முதலாக இங்குக் கூறப்பட்டவை மக்கள் வாழ்நலத்திற்கு ஏற்ற பொருள்களாயிருத்தல் கண்டுகொள்க. வள், வளமையாற் பணமெப்பட்டது. வள் - தோல். வார் எனக் கொண்டு இலக்கணையாகச் செருப்பு என்றுமாம். எனவென்னுஞ் செயவெனெச்சத்தைச் செய்தெனெச்சமாகத் திரித்துக் கொள்க. துணை : பண்பாகுபெயர்.

(50)

51. உண்ணீர் வளங்குளங் கூவல் வழிப்புரை
தண்ணீரை யம்பலந்தான் பாற்படுத்தான் - பண்ணீர
பாடலொ டாடல் பயின்றுயர் செல்வனாய்க்
கூடலொ டூடலுளான் கூர்ந்து.

(இ-ள்.) உண்ணீர் வளம் - பருகுநீர் வளத்தினையும், குளம் குளத்தையும், கூவல் - கிணற்றையும், வழிப்புரை - வழிகளிற் பலருந் தங்குதற்குரிய இலைக் குடில்களையும், தண்ணீரே - தண்ணீர்ப் பந்தல்களையும், அம்பலம் - மண்டபங்களையும், பாற் படுத்தான் - வகை வகையாய் அமைப்பித்தவன், உயர் செல்வனாய் - மிகுந்த செல்வமுடையவனாய், பண்ணீர - இசையி னியல்பினவான, பாடலொடு - பாடலையும், ஆடல் - ஆடலையும், பயின்று - பலகாலுங் கேட்டுங் கண்டும் நுகர்ந்து, ஊடலொடு கூடல் - உள்ளன்பு மிக்க பெண்ணினல்லாளின் ஊடலோடு கூடலையும், கூர்ந்து உளான் - மிக்குள்ளவனாவான்.

(ப-பொ-ரை.) நாட்டினுள் நீர்வளத்தையும் குளத்தையும் கிணற்றையும் பலருஞ் செல்லும் வழியிற் றங்குதற்குரிய சிறு வீடுகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் மண்டபங்களையும் வகையினால் அமைப்பித்தவன், சிறந்த செல்வமுடைவனாய், இசையோடு பொருந்தின இயல்புடைய பாடலையும் ஆடலையும் பன்முறை கேட்டுங் கண்டும் அனுபவித்து உள்ளன்புடைய மாதர்களின் ஊடலோடு கூடுதலை மிகுந்துள்ளவன் ஆவான்.

(க-து.) உலகத்துக்கு உண்ணீர் வளம் முதலியன அமைத்துக் கொடுப்பவன், இம்மை யின்பங்களை நன்கு நுகர்வான்.

பருகுதற்குரிய இன்சுவை நீர் எங்குங் கிடைப்பது அருமையாகலின், வாய்க்கால் வெட்டுதல் ஊற்றுக்குழி தோண்டுதல் முதலியவற்றால் அதனை ஆங்காங்கும் வளம்படுத்தித் தருதலைக் குறித்தற்கு ‘உண்ணீர் வள' மெனப்பட்டது. உண்ணீர் என்பதை உள் நீர் எனப் பிரித்து நாட்டினுள் நீர் எனலுமாம்.