புரை - குடில், பால் பகல் என்பதன் மரூஉ; பகுத்தல் என்பது பொருள். ‘ஊடலொடு கூட'லென்று மாற்றுக. நீர; குறிப்பு வினையாலணையும் பெயர். (51) 52. இல்லிழந்தார் கண்ணிழந்தா ரீண்டியசெல் வம்மிழந்தார் நெல்லிழந்தா ரானிரை தானிழந்தார்க் - கெல்லுழந்து பண்ணியூ ணீந்தவர் பல்யானை மன்னராய் எண்ணியூ ணார்வா ரியைந்து. (இ-ள்.) இல் இழந்தார்க்கு - தமது இருப்பிடத்தை இழந்தவர்களுக்கும், கண் இழந்தார்க்கு - கண்ணை இழந்தவர்களுக்கும், ஈண்டிய - பெருகியிருந்த, செல்வம் இழந்தார்க்கு - செல்வத்தை இழந்தவர்களுக்கும், நெல் இழந்தார்க்கு - விளைந்த நெல்லை இழந்தவர்களுக்கும் ஆன் நிரை இழந்தார்க்கு - ஆன் மந்தையை இழந்தவர்களுக்கும், எல் உழந்து - வெயிலில் உழன்று பொருளீட்டி, ஊண் பண்ணி ஈந்தவர் - உணவுகள் சமைத்துக் கொடுத்தவர், பல் யானை மன்னராய் - பலப்பல யானைகளையுடைய அரசர்களாய், எண்ணி - எல்லாரானும் மதிக்கப்பட்டு, இயைந்து - மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார்களுடன் கூடி, ஊண் ஆர்வார் - இன்சுவையுணவுகளை ஆர உண்பர். (ப-பொ-ரை.) வீட்டை இழந்தவர்களுக்கும், கண்ணையிழந்தவர்களுக்கும், சேர்ந்திருந்த செல்வத்தை இழந்தவர்களுக்கும், விளைந்த நெல்லை யிழந்தவர்கட்கும், பசுமந்தையை இழந்தவர்களுக்கும், இரவிலும் வருந்தி முயன்று பொருளையீட்டி உணவுகளைச் சமைத்துக் கொடுத்தவர், பலவாகிய யானைப்படையுடைய அரசர்களாய் மதிக்கப்பட்டு, மனைவி மக்கள் முதலியவர்களுடன் கூடி நுகர்பொருளை நுகர்ந்திருப்பர். (க-து.) இருக்க இடம் இல்லாதார் முதலியவர்கட்கு உழன்று தேடியேனும் உணவு முதலியன உதவி செய்கின்றவர், இம்மையிற் செல்வராய் இன்ப நுகர்வார். இல் - மனைவியென ஆகுபெயராகக் கொள்வாருமுளர். எல் - இரவுமாம். இழந்தா ரென்பதை இயல்பாகவே இல்லாதாரென்றுரைப்பினுமாம். நான்கனுருபை ஏனையவற்றிற்குங் கூட்டுக. எண்ணி யென்பதற்குக் செயப்பாட்டுவினைப் பொருளுரைக்க. (52)
|