53. கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான் முடம்பட்டார் மூத்தார்மூப் பில்லார்க் - குடம்பட் டுடையரா யில்லுளூ ணீத்துண்பார் மண்மேல் படையராய் வாழ்வார் பயின்று. (இ-ள்.) கடம்பட்டார்க்கு - கடன்பட்டவர்களுக்கும், காப்பு இல்லார்க்கு - தம்மைக் காப்பவர் எவரும் இல்லாதவர்களுக்கும், கைத்து இல்லார்க்கு - செல்வம் இல்லாதவர்களுக்கும், தம் கால் முடம்பட்டார்க்கு - தம்முடைய கை கால்கள் முடம்பட்டவர்களுக்கும், மூத்தார்க்கு - கிழத்தனம் அடைந்தவர்களுக்கும், மூப்பு இல்லார்க்கு - பெற்றோர் முதலிய மூத்தோர்கள் இல்லாதவர்களுக்கும், உடம்பட்டு உடையராய் - உள்ளமொத்து அன்புடையராய், இல்லுள் - வீட்டில், ஊண் ஈத்து உண்பார் - உணவுகொடுத்து உண்பவர், மண்மேல் - உலகத்தில், பயின்று - உறவினருடன் அளாவி, வாழ்வார் - மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். (ப-பொ-ரை.) கடன்பட்டவர்களுக்கும், தம்மைக் காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், பொருளில்லாதவர் கட்கும், தங்கால் முடம்பட்டவர்க்கும், முதிர்ந்தவர்களுக்கும், பெற்றோர் முதலிய பெரியார்க ளில்லாதவர்க்கும், மனமியைந்து அன்புடையவர்களாய்த் தம் வீட்டில் உணவு கொடுப்பித்து உண்பவர், பூமியின்மீது நால்வகைப் படைகளையுமுடைய மன்னர்களாய் மனைவி மக்களுடன் கூடி இன்பமுடன் வாழ்வார்கள். (க-து.) கடன்பட்டவர் முதலானவர்க்கு உணவு கொடுத்து உதவி செய்பவர், மன்னராய் இன்பம் மிக்கு வாழ்வார். காப்பு - காப்பவர் : தொழிலாகுபெயர். கைத்து, கையிலிருப்பதென்பது பொருள்; கை, பகுதியெனவும், து ஒன்றன் படர்க்கை விகுதியெனவும், த் சந்தியெனவுங் கொள்க. ‘கால் முடம் பட்டா' ரென்பது சினை வினை முதலின்மே லேற்றியுரைக்கப்பட்டது; காலெனவே இனம்பற்றிக் கைகளையும் உரைத்துக்கொள்க. மண்மேல் - மேல்: ஏழனுருபு. "புண்பட்டார் போற்றுவா ரில்லாதார்" என்ற சிறுபஞ்சமூலச் செய்யுட் கருத்துடன் இச்செய்யுளை ஒப்பு நோக்குக. (53) 54. பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள் கார்ப்பார் தமையாதுங் காப்பிலார் - தூப்பால நிண்டாரா லெண்ணாது நீத்தவர் மண்ணாண்டு பண்டாரம் பற்றவாழ் வார்.
|