பக்கம் எண் :

5

என்பதில், புரிதல் விரும்புதலின்மேல் வந்தது. ‘நயம்புரிந் துறையுநர்' (145) என்ற புறநானூற்றில் வந்ததுபோல. அலை : முதனிலைத் தொழிற்பெயர்; ஈண்டு வருத்துதலென்க. மண்ணவரென்றது, மக்களை. மேல் : பண்பாகுயெர். ‘பசைதல் பரியாதா மேல்' (துறவு - 10) என்றார் நாலடியாரிலும். விடும் : செய்யுமென்னும் முற்று ஆண்பாலுக்கு வந்தது. ‘கோதாய்' என்றமையின், இப்பாட்டை மகடூஉ முன்னிலை யென்ப. முன் வந்த பாட்டும் இது. இன்னன வருமிடங்களில் இதுவே உரைத்துக்கொள்க.

(2)

3. தவமெளிது தான மரிதுதக் கார்க்கேல்
அவமரி தாத லெளிதால் - அவமிலா
இன்பம் பிறழி னியைவெளிது மற்றதன்
துன்பந் துடைத்த லரிது.

(இ-ள்.) தவம் எளிது - தவஞ் செய்தல் ஒருவற்கு எளிதாம். தானம் அரிது - ஆனால், ஈகையுடையனாயிருத்தல் அரிது, தக்கார்க்கேல் - தகுதியுடைய சான்றோர்க்கானால். அவம் அரிது - குற்றஞ்செய்தல் அரிதாம், ஆதல் எளிது - நல்வழியைச் சார்தல் எளிதாம். அவம் இலா - தாழ்வில்லாத, இன்பம் பிறழின் - வீட்டின்பம் தவறுமாயின், இயைவு எளிது - பிறவி தொடர்தல் எளிதாகும்; மற்று - ஆனால், அதன் துன்பம் துடைத்தல் - அப்பிறவித் தொடர்பின் துன்பத்தை நீக்குதல், அரிது - அரிதாகும்.

(ப-பொ-ரை.) யாவர்க்குந் தவஞ் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது பெரியோர்க்குக் குற்றத்துக்குள்ளாதல் அரிது; நன்னெறியி லொழுகுதல் எளிது. கெடுதலில்லாத இன்பநெறி தடுமாறிச் சென்றால்பிறப்பிற் பொருந்துதல் எளிது. அவ்வாறு பிறந்ததின்கணுண்டாகுந் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல் அரிது.

(க-து.) மக்கட்குத் தவம் எளிது, ஈகை அரிது; தக்கார்க்குத் தீமை அரிது, நன்மை எளிது; திருவருள் நெறி தவறின் பிறவி எளிது; ஆனால் அதன் நீக்கம் அரிது.

தவம், தந்நன்மைக்கும், ஈகை பிறர் நன்மைக்கு மாகலின் முன்னது எளிதும், ஏனையது அரிதுமாயின. ‘தக்கார்க்கு ஆதல் எளி'தென்க. ஆல் : அசை. இன்பத்துக்கு அவமென்றது, நிலையாமையுந் தாழ்வையுமுடைய குற்றத்தை. இயைவு : தொழிற்பெயர். மற்று : வினைமாற்றின்கண் வந்தது. எளிது : எண்மை யென்னும் பகுதி யடியாகப் பிறந்த ஒன்றன்பாற்குறிப்பு வினைமுற்று.

(3)

4. இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ்சே ராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்
கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின்கண்
விண்டவர்நூல் வேண்டா விடும்.

(இ-ள்.) இடர் தீர்த்தல் - பிறருக்கு இடுக்கண் நீக்குதலும், எள்ளாமை - பிறரை இகழாமையும், கீழ் இனம் - கீழ் மக்களின் கூட்டத்தோடு, சேராமை - இணங்காமையும், யார்க்கும் - எல்லார்க்கும், படர் தீர்த்தல் - பசித்துன்பத்தை நீக்குதலும், பழிப்பின் நடை - சான்றோர் பழித்தற்குரிய ஒழுக்கத்தை, தீர்த்தல் - நீக்குதலும், கண்டவர் - தன்னோடு பழகுவார், காமுறும் சொல் - விரும்புதற்குரிய மொழிகளைப் பேசுதலும், காணின் - ஒருவன் மேற்கொள்வானானால், கலவியின்கண் - உலகப்பற்றினின்றும், விண்டவர் நூல் - நீங்கிய சான்றோரின் அறிவு நூல்கள் வேண்டாவிடும் - வேண்டாதனவாய் விடும்.

(ப-பொ-ரை.) பிறர்க்கு நேரிட்ட துன்பந் துடைத்தலும், பிறரை இகழாமையும், கீழ்மக்களோடு பழகாமையும், யாவர்க்கும் பசித்துன்பம் போக்குதலும், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதலும், தன்னை யெதிர்ப்பட்டவர் விரும்பும் இன்சொல்லும் ஒருவன் தானே கண்டுகொண்டானெனில் கற்றறிந்தோராற் சொல்லப்பட்ட நூல்களைப் பார்த்து அறிய வேண்டிய பொருள் ஒன்றுமில்லாதவன் ஆவன்.

(க-து.) இடர் தீர்த்தல் முதலிய ஒழுக்கங்களையுடையவன் கற்றவர்க்கு ஒப்பாவான்.

ஆன்றோரருளிய அறிவு நூல்களைக் கற்றலின் பயன் இவ்வொழுக்கங்க ளாகலின், இங்ஙனங் கூறப்பட்டது. இடர்தீர்த்தல் இடுக்கண் தீர்த்தலெனவும், படர் தீர்த்தல் வறுமையினால் விளையுந் துன்பத்தைத் தீர்த்தலெனவுங் கொள்க. என்னை, இடுக்கண் செல்வர்களுக்கும் ஒரோவொருகால் நேருகின்றமையினென்பது. பழிப்பின் நடை - தீயவொழுக்கம். ‘பேசுத'லெனவொன்று சொல்லெச்சமாய் வருவித்துக்கொள்க. கலவியின்கண்