பக்கம் எண் :

50

(இ-ள்.) பார்ப்பார் - அந்தணர், பசித்தார் - பசித்தவர், தவசிகள் - தவஞ்செய்கின்றவர், பாலர்கள் - குழந்தைகள், கார்ப்பார் - பிறரால் வெறுக்கப்படுகின்றவர்கள், தமை காப்பு - தம்மைக் காத்துக்கொள்ளுதற்குரிய ஆதரவு, யாதும் இல்லார் - சிறிதும் இல்லாதவர்கள், தூப்பால நிண்டார் - அழுக்கற்ற நல்லொழுக்கத்தில் மிக்கவர்கள் என்பார்க்கு, எண்ணாது நீத்தவர் - பயன் கருதாமல் அவர் துன்பங்களை நீக்கியவர்கள், மண் ஆண்டு - உலகத்தை அரசாண்டு, பண்டாரம் பற்ற - செல்வம் தம்மைச் சூழ்ந்திருக்க, வாழ்வார் - இன்பத்துடன் வாழ்வார்கள்.

(ப-பொ-ரை.) பார்ப்பாரும், பசித்தவர்களும் தவஞ் செய்கின்றவர்களும், பாலர்களும், உடம்பை வெறுக்கின்றவர்களும், தங்களைக் காத்தற்குரிய ஆதரவு ஒன்று மில்லாதவர்களும், தூய்மையாகிய தன்மையை யுடையனவாகிய அறநெறிகளில் மிக்கவர்களும் ஆகிய இவர்களுடைய துன்பங்களை யாதொரு பயனையும் விரும்பாமல் போக்கினவர்கள், பூமியை ஆண்டு செல்வம் தம்மைச் சூழ்ந்திருக்க இன்புடன் வாழ்வார்கள்.

(க-து.) அந்தணர் முதலியோருடைய துன்பங்களைப் பயன் கருதாமல் நீக்கினவர்கள் செல்வராய் வாழ்வார்.

கார்த்தல் - உறைத்தல்; வெறுக்கப்படுதல். தமைக்காப்பு யாதுமில்லார் என்க. தூப்பால வென்பது, "தூய்மையான பான்மையுடைய நெறிக" ளெனப் பொருள்படுதலின், இதனைப் பண்புத்தொகை யெனக் கொள்க. தூப்பாலவற்றிலென ஏழனுருபு விரித்துக்கொள்க. பயன் கருதாது நீத்தாரென்றற்கு ‘எண்ணாது நீத்தா' ரென்றார். என்றலின். ‘இரக்கத்தால் நீத்தா' ரென்பது பெறுதும். பண்டார மென்பது, நிதியறை. நீண்டார் என்பது நிண்டார் எனக் குறுகிற்று.

(54)

55. ஈன்றாரீன் காற்றளர்வார் சூலார் குழவிகள்
மான்றார் வளியான் மயங்கினார்க் - கானாரென்
றூணீய்த் துறுநோய் களைந்தார் பெருஞ்செல்வம்
காணீய்த்து வாழ்வார் கலந்து.

(இ-ள்.) ஈன்றார்க்கு - பிள்ளையைப் பெற்றவர்க்கும், ஈன்கால் - பிள்ளையைப் பெறுகின்ற் காலத்தில், தளர்வார்க்கு - வேதனைப்படுகின்றவர்க்கும், சூலார்க்கு - கருவுற்றிருக்கின்றவர்க்கும், குழவிகட்கு - குழந்தைகளுக்கும், மான்றார்க்கு - அறிவு மயங்கினர்களுக்கும், வளியால் மயங்கினார்க்கு - வாதநோயால்