பக்கம் எண் :

53

யும், பெருவயிற்றுப் பெருந்தீயு மென இவ் ஆறு திறத்தாராகிய பிணியுடையார்க்கு மரிய வருத்தத்தைத் தவிர்த் தூணீய்ந் தந்நோய்களைத் தீர்த்தாரே; பின்பு அரசராய்ப் பிறந் துலகினைக் காத்து விரும்பிய நுகர்ச்சியை நுகர்வார்.

(க-து.) நோயாளர்க்கு நோய் நீக்கலும் உணவு கொடுத்தலும் வேண்டும்.

கருமை, கொடுமை; "கருவில் ஓச்சிய" (பெரும்பாண், 74) என்னும் பெரும்பாணாற்றுப்படையில் இப்பொருள் காண்க. நோய் என்பதைப் பிற விடங்களினுங் கூட்டுக. போற்றி செயப்பாட்டு வினைப்பொருளது.

(57)

58. காமாடார் காமியார் கல்லா ரினஞ்சேரா
ராமாடா ராய்ந்தார் நெறிநின்று - தாமாடா
தேற்றாரை யின்புற வீய்ந்தார்முன் னிம்மையான்
மாற்றாரை மாற்றிவாழ் வார்.

(இ-ள்.) முன் - முற்பிறப்பில், காம் ஆடார் - காமத்தை நுகராமல், காமியார் - பிறர் பொருளை விரும்பாமல், கல்லார் இனம் சேரார் - படிக்காதவர்கள் கூட்டத்தைச் சேராமல், ஆம் ஆடார் - நீரில் விளையாடாமல், ஆய்ந்தார் நெறிநின்று - பெரியோர்களின் ஆராய்ச்சி நெறிநின்று, தாம் ஆடாது - தாம் வழுவாமல் ஒழுகி, ஏற்றாரை - தம்மை அண்டி இரப்பவர்களுக்கு, இன்புற ஈந்தார் - அவர்கள் மகிழ்ச்சியடையும்படி கொடுத்தவர்களே, இம்மையான் - இப்பிறப்பில் மாற்றாரை மாற்றி - பகைவர்களைப் புறந்தரச் செய்து, வாழ்வார் - அரசர்களாய் வாழ்பவராவார்கள்.

(ப-பொ-ரை.) காமநுகராது, பொருளின்மேற் காதலியாது, கல்லாரினஞ் சேராது, நீரில் விளையாடாது, கற்றார் நிற்கு நெறியின்க ணின்று, தாம் வழுவா திரந்தேற்றாரை யின்புறும் வகை முற்பிறப்பின்க ணீய்ந்தார் இப்பிறப்பின்கண் பகைவரை வென்றரசராய் வாழ்வார்.

(க-து.) முற்பிறப்பில் நல்லொழுக்கத்தினின்று பிறர்க்குதவி செய்பவர்களே, இப்பிறப்பில் அரசர்களாய் வாழ்கின்றவராவார்கள். காமம் : கடைக்குறை; ஆம் : நீர்; முன் : ஆகுபெயர்.

(58)