59. வணங்கி வழியொழுகி மாண்டார்சொற் கொண்டு நுணங்கியநூ னோக்கு நுழையா - விணங்கிய பானோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய் நூனோக்கி வாழ்வா னுனித்து. (இ-ள்.) வணங்கி - வணக்க முடையவர்களாய், வழி ஒழுகி - நல்வழியிலே நடந்து, மாண்டார் சொல் கொண்டு - சான்றோரறிவுரைகளை மேற்கொண்டு, நுணங்கிய நூல் - நுட்பமான அறிவு நூல்களை, நோக்கி - ஆராய்ந்து, நுழையா - அந்நூற்பொருள்களில் தன் அறிவைச் செலுத்தி, இணங்கிய பால் நோக்கி - பொருத்தமான பகுதிகளை ஆராய்ந்து, வாழ்வான் - அவற்றின்படி வாழ்கின்றவன், பழி இல்லா மன்னனாய் - வடுவில்லா வேந்தனாய், நூல் நுனித்து நோக்கி - அறிவு நூல்களையும் நுட்பமாய் ஆய்ந்துணர்ந்து, வாழ்வான் - பெருவாழ்வில் வைகுவான். (ப-பொ-ரை.) பிறர்க்குப் பணிந்து, நெறியே யொழுகி, மாட்சிமைப்பட்டார் சொற்களை யுகந்துகொண்டு, நுண்ணிய நூல்களை யோதி, நுண்ணிதாக வறிந்து பொருந்திய பான்மையை நோக்கி யொழுகுவான், குற்றமில்லா வரசனாய் நுண்ணிய நூல்களை யறிந்து மறுமையின்கண் வாழ்வான். (க-து.) இம்மையில் வணக்கமும், ஒழுக்கமும், சான்றோர் மதிப்பும், ஆராய்ச்சியும் உடையவன், மறுமையில் இக்கல்வியுடன் பொருளும் ஒருங்கெய்தி வாழ்வான். நுணங்கலும் நுனித்தலும் நுட்பமாதலென்க. நுண்ணென்பதும் நுனியென்பதும் முறையே அவற்றிற்குப் பகுதிகளாம். நுணங்கி யாராயவேண்டிய பொருளை நுணங்கிய வென்றது. காரியத்தைக் காரணமாகக் கூறிய உபசார வழக்கு. (59) 60. பெருமை புகழறம் பேணாமை சீற்றம் அருமைநூல் சால்பில்லார் சாரி - னிருமைக்கும் பாவம் பழிபகை சாக்காடே கேடச்சம் சாபம்போற் சாருஞ் சலித்து. (இ-ள்.) பெருமை - பெரிய நிலைமையும், புகழ் - புகழும், அறம் - அறமும், சீற்றம் பேணாமை - சினத்தை விரும்பாமையும், அருமைநூல் - அரிய நூலுணர்ச்சியும், சால்பு - பெருந்தன்மையும்,
|