இல்லார் - இல்லாதவர்களை, சாரின் - சேர்ந்தால், இருமைக்கும் - இம்மை மறுமை யிரண்டிலும், பாவம் - தீவினையும் பழி - பழியும், பகை - பகையும், சாக்காடு - சாவும், கேடு - பொருளழிவும், அச்சம் - அச்சமும், சாபம்போல் - சான்றோர்கள் இடுகின்ற ஆணைமொழியைப்போல், சலித்து சாரும் - தேர்ந்தெடுக்கப்பட்டாற்போல் வந்து சேரும். (ப-பொ-ரை.) பெருமையும், புகழும், அறம் பேணாதசினமும், அருமை நூலும், சால்புக் குணமுமில்லார் சாரின், இம்மை மறுமை யென்னு மிரண்டிற்கும் பாவமும், பழியும் பகையும், சாக்காடும், கேடும், அச்சமு மென்னு மிவ் ஆறு திறமு முனிவராற் சாபமிட்டாற் போலச் சென்று சாரும் வெகுண்டு. (க-து.) கீழோரைச் சார்ந்தால் பழி பாவம் முதலியன வந்தெய்தும். சீற்றம் பேணாமை யென்று கொள்க. ‘சாபம் போல்' என்றார் கட்டாயஞ் சாரு மென்றற்கு. சலித் தென்றார், நல்லனவெல்லாங் கழித்துத் தீயன வெல்லாம் தெரிந்தெடுத்தாற்போல் திரண்டு சேருமென்றற்கு. சாக்காடே என்பதிலுள்ள ஏகாரத்தைச் சாப முதலிய மூன்றனோடும் பின்னுள்ள கேடு முதலிய இரண்டனோடும் கூட்டுக. "இல்லார்ச் சாரின்" என்பது பாடமாயின் இல்லாரை ஒருவன் சார்ந்தால் அவனைப் பழி முதலிய அவ் வாறு திறத்தனவும் சாரும் என்க. (60) 61. ஆர்வமே செற்றங் கதமே யறையுங்கால் ஓர்வமே செய்யு முலொபமே - சீர்சாலா மானமே மாய வுயிர்க்கூன மென்னுமே ஊனமே தீர்ந்தவ ரோத்து. (இ-ள்.) அறையுங்கால் - சொல்லுமிடத்து, ஊனம் தீர்ந்தவர் - குற்றமற்ற சான்றோர்களுடைய, ஓத்து - அறிவு நூல்கள், ஆர்வம் - அவாவும், செற்றம் - பகையும், கதம் - சினமும், ஓர்வம் - ஒருபாற் சார்தலும், செய்யும் உலோபம் - மேற்கொள்ளப்படும் ஈயாத்தன்மையும், சீர்சாலா - சிறப்பு நிரம்பாத, மானம் - பெருமையும் என்பன, மாய உயிர்க்கு - நிலையாத மாந்தர்க்கு, ஊனமே - கேடு தருவனவேயாம், என்னும் - என்று சொல்லும்.
|