உள்ளென்னும் ஏழனுருபு தருவித்துரைக்க. செல்லுதல் இழுக்கும் இழவும் தருமென்க. ஆர்தல் - கட்டுதல். உம் : எண்ணுப் பொருளன. இழுக்கு : முதனிலைத் தொழிற் பெயர். (62) 63. ஊணொடு கூறை யெழுத்தாணி புத்தகம் பேணொடு மெண்ணு மெழுத்திவை - மாணொடு கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து. (இ-ள்.) இம்மையான் - இப்பிறப்பில், வேட்டு எழுத - புலவர் பெருமக்கள் தமது வரலாற்றை விரும்பி எழுத, விரிந்து - வாழ்வு பெருகி, வாழ்வார் - வாழ்கின்றவர்கள், பேணொடும் - விருப்பத்தோடும், மாணொடும் - மாட்சிமைப்பட்ட நல்லியல்பு நற்செயல்களோடும், எண்ணும் - கணக்கும், எழுத்தும் - இலக்கணமுமாகிய, இவை கேட்டு - இவற்றை ஆசிரியர்களிடத்தில் பாடங்கேட்டு, எழுதி - ஏட்டில் எழுதியும், ஓதி - படித்தும். வாழ்வார்க்கு - வாழ்கின்ற மாணாக்கர்களுக்கு, ஊணொடு - உணவோடு, கூறை - உடையும், எழுத்தாணி - எழுத்தாணியும், புத்தகம் - சுவடியும், ஈய்ந்தார் - தமது முற்பிறப்பிற் கொடுத்துதவினர்களே யாவர். (ப-பொ-ரை.) ஊணும் ஆடையும், எழுத்தாணியும், பொத்தகமும் என்கின்ற நான்கினையும், விருப்பத்துடனேயெண்ணும், எழுத்து மென்னு மவற்றையு மாணாக்கர் தொழிலினாற் கேட்டெழுதி யோதி வாழ்வார். முற்பிறப்பின்கட் கொடுத்தா ரிப்பிறப்பின்க ணுலகத்தார் விரும்பித் தம தாணை விரும்பியெழுத மன்னராய் வாழ்கின்றார். (க-து.) ஊக்கத்தோடு கற்கும் மாணாக்கர்களுக்கு ஊண் உடை முதலியன கொடுத்துதவுகின்றவர்கள் செல்வராய் வாழ்வர். ஒடு; உடனிகழ்ச்சிப் பொருளன. மாண் - மாட்சிமை, ஈண்டு மாணாக்கர்க்குரிய தொழில்கள். மாணாக்கர்க்குரிய மாட்சிமையாவன - தலைமாணாக்கர்க்குரிய நல்லியல்புகளும், ‘பொழுதொடு செல்லல்' முதலான நற்செயல்களுமென்க. இவை தம்மை யெல்லாம்,
|