பக்கம் எண் :

58

"அன்னங் கிளியே நன்னிற நெய்யரி
யானை யானே றென்றிவை போலக்
கூறிக் கொள்ப குணமாண் டோரே"

"கோடன் மரபு கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
முன்னும் பின்னு மிரவினும் பகலினு
மகலா னாகி யன்பொடு கெழீஇக்
குணத்தொடு பழகிக் குறிப்பின் வழிநின்
றாசற வுணர்ந்தோன் வாவென வந்தாங்
கிருவென விருந்தே டவிழென வவிழ்த்துச்
சொல்லெனச் சொல்லிச் செல்லெனச் சென்று
பருகுவ னன்ன வார்வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை வல்ல னாகிப்
போற்றிக் கோட லதனது பண்பே"

என்னும் ஆசிரியர் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிரவிருத்தி மேற்கோணூற்பாக்களால் நன்கறியற்பாலன. இம்மையான் : உருபு மயக்கம்.

(63)

64. உயர்ந்தான் தலைவனென் றொப்புடைத்தா னோக்கி
உயர்ந்தானூ லோதி யொடுங்கி - உயர்ந்தான்
அருந்தவ மாற்றச் செயின்வீடா மென்றார்
பெருந்தவஞ் செய்தார் பெரிது.

(இ-ள்.) பெருந் தவம் - அரிய தவத்தை, பெரிது செய்தார் - மிகவும் முயன்று ஆற்றிய சான்றோர், ஒப்புடைத்தால் நோக்கி - தக்க முறையில் ஆராய்ந்து, உயர்ந்தான் - எல்லா வகைகளிலும் இயல்பாகவே உயர்ந்திருப்பவன், தலைவன் என்று - கடவுளென் றுணர்ந்து, உயர்ந்தான் நூல் - அக்கடவுளியல்பைப் பற்றிய அறிவு நூல்களை, ஓதி ஒடுங்கி - கற்று அடங்கி, உயர்ந்தான் அருந்தவம் - அவ்விறைவனை நோக்கிய அரிய தவங்களை, ஆற்றசெயின் - மிகுதியும் செய்வானாயின், வீடு ஆம் - அவனுக்கு வீடுபேறுண்டாகும், என்றார் - என்று அறிவுறுத்தருளினார்.