(ப-பொ-ரை.) எல்லாரினு முயர்ந்தவன் றலைவனாவானென் றுள்ளங்கொண்டு, மாற்றவர்க்குச் சொன்ன நன்மையானே யொக்க வாராய்ந்து, உயர்ந்தவனாற் சொல்லப்பட்ட வாகமத்தை யோதி, அவ்வாகமத்திற் சொன்ன வகையானேயடக்க முடையவனாய்; அவ்வுயர்ந்தவன் சொல்லிய வரிய தவத்தை மிகவுஞ் செய்தால், பிறப்பில்லாத வீடாமென்று சொல்லினார், மிகவும் பெருந் தவஞ்செய்தார். (க-து.) கடவுணெறியி லொழுகுவார்க்கே வீடுபேறுண்டாகுமென்பது சான்றோர் கருத்து. ஒப்புடைத்து, இஃது ஒருசொன்னீர்மைத்தாகலின், குறிப்பு வினையாலணையும் பெயரென்க. கடவுள் தெளிந்து அவனைப் பாராட்டும் அறிவு நூல்களை ஓதியடங்கி அவனுக்குத் தவஞ்செய்வார் வீடடைவாரென்பது பொருள். ‘உயர்ந்தா னருந்தவ' மென்றவிடத்து இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் விரித்துரைத்துக் கொள்க. வீடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். அறிவு நூல்களை யறிதலும். அறிந்தாங்கு அடங்கி நிற்றலும் அருந்தவமியற்றலும் ஒன்றினொன் றமையாதாதல் நோக்கி ‘ஓதி யொடுங்கி யருந்தவஞ் செயின்' என்றார். (64) 65. காலனா ரீடறுத்தல் காண்குறின் முற்றுணர்ந்த பாலனார் நூலமர்ந்து பாராது - வாலிதா ஊறுபா டில்லா வுயர்தவந் தான்புரியின் ஏறுமோ மேலுலக மோர்ந்து. (இ-ள்.) காலனார் ஈடு அறுத்தல் - கூற்றுவன் வலிமையை - நீக்குதற்குரிய வழியை, காண்குறின் - அறிய விரும்பினால், முற்றுணர்ந்த பாலனார் - முற்றுணர்ந்த வகைமையையுடைய ஆண்டவனுடைய, நூல் அமர்ந்து - நூல்களை விரும்பிக் கற்று, பாராது - வருத்தம் நோக்காது, வாலிதா - தூய்மையுடையதாக, ஊறுபாடு இல்லா - கெடுதியில்லாத, உயர்தவம் - சிறந்த தவத்தினை, ஓர்ந்து புரியின் - திருவருளுணர்ந்து ஒருவன் செய்வானாயின், மேல் உலகம் ஏறும் - மேலான வீடுபேற்றுலகத்திற் செல்வான். (ப-பொ-ரை.) காலனாரது வலியை யறுத்தும் பிறப் பறுக்கலுறின் முற்றுணர்ந்த தன்மையாரையு மவராற் சொல்லப்பட்ட வாகமத்தையும் விரும்பி யரிதென்று பாரா தூறுபாடில்
|