என்பதில் இன் : சாரியை; கண். வேற்றுமை மயக்கமென்க. கீழ் : பண்பாகுபெயர். எள்ளாமை : எள் என்னும் பகுதியடியாகப் பிறந்த எதிர்மறைத் தொழிற் பெயர். விண்டவர் - விள், நீங்கு - பகுதி, "கல்வியின் கண் விண்டவர்" என்று கொண்டு கல்வியிற்றெளிந்தவர்கள் என்பதுமாம். (4) 5. தனக்கென்று மோர்பாங்கற் பொய்யான்மெய் யாக்கும் எனக்கென் றியையான்யா தொன்றும் - புனக்கொன்றை போலு மிழையார்சொற் றேறான் களியானேல் சாலும் பிறநூலின் சார்பு. (இ-ன்.) தனக்கு என்றும் - தனக்கெனவும், ஓர் பாங்கன் என்றும் - தன்னைச் சார்ந்தவனுக்கெனவும் வேறுபட்டு, பொய்யான் - பொய் சொல்லாமலும், மெய் ஆக்கும் - உண்மையே சொல்லிக்கொண்டும், எனக்கு என்று - தனக்கு வேண்டுமென்று,யாதொன்றும் - யாதொரு பொருண்மேலும், இயையான் - பற்றுவையாமலும், புனக்கொன்றை போலும் - முல்லை நிலத்தின் கண்ணுள்ள கொன்றைப் பூவைப்போன்ற, இழையார் - நகைகளையணியும் பெண்களின், சொல் தேறான் - சொற்களைப் பின்பற்றாமலும், களியானேல் - செருக்குக் கொள்ளாமலுமிருப்பனாயின், நூலின் பிற சால்பு - அறிவு நூல்களாலறிதற்குரிய ஏனைய பண்புகளும், சாலும் - தாமே வந்து நிரம்பும். (ப-பொ-ரை.) தனக்கென்றும் தன்னைச் சார்ந்தவனுக்கென்றும் பொய்யுரையாதவனாய், உண்மையையே யுரைப்பவனாய், யாதொரு பொருளையும் எனக்குரியதென அன்பு வையாதவனாய், முல்லை நிலத்திலுள்ள கொன்றை மலரை ஒக்கும் அணிகளையணியும் மாதர் சொல்லைப் பேணாதவனாய், செல்வச் செருக்கில்லாதவனாய் ஒருவன் வாழ்வானாயின், அவனிடத்து அறநூல்களிற் கூறப்பட்ட மேன்மையான பொருள்களெல்லாம் வந்து நிரம்பும். (க-து.) பொய்யாமை முதலியன உடையானுக்கு நூல்களால் உணர்தற்குரிய ஏனைய நல்லியல்புகளுந் தாமே வந்து நிரம்பும். முற்றுக்களை எச்சமாக்கிக் கொள்க. சால்பென்றவிடத்து எச்சவும்மை தொக்கது. சால்பு ஈண்டு மெய்யுணர்வு முதலியன.
|