லாத வுயர்ந்த தவத்தை யொருவன் செய்வானாயின் வீட்டுலகத்தின்க ணேறுமேனோக்கி. (க-து.) ஆண்டவ னறிவுநூல்களை யோதித் தவஞ்செய்வார் வீடுபேறடைவர். காலனார், விகுதிமேல் விகுதி உயர்வு கருதி வந்தது. ஈடு - வலிமை மேலது. காண்குறின், கு : எழுத்துப் பேறு. ‘உறு, படு' வென்னும் முதனிலைத் தொழிற்பெயர்கள் புணர்ந்து ஒருசொற்றன்மைப்பட்டுக் கெடுதி யென்னும் பொருளுணர்த்தின. ஆம் : அசை. உயர்தவம் - உயர்வாகிய தவம்; பண்புத்தொகை. (65) 66. பொய்தீர் புலவர் பொருள்புரிந் தாராய்ந்த மைதீ ருயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர் சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின் றிடரின் றினிதுயிலு மின்று. (இ-ள்.) பொய்தீர் புலவர் - பொய்ம்மை நீங்கிய புலவர்கள், பொருள் புரிந்து ஆராய்ந்த - மெய்ப்பொருள் விரும்பி யாராய்ந்த, மைதீர் உயர் கதியின் - குற்றமற்ற வீடுபேற்றின், மாண்பு உரைப்பின் - மாட்சிமை சொல்லு மிடத்து, மைதீர் சுடர் இன்று - அங்கு இருள் கெடுக்கும் ஞாயிறு இல்லை, சொல் இன்று - பேச்சு இல்லை, மாறு இன்று - நிலை மாறுதல் இல்லை, சோர்வு இன்று - தளர்ச்சி இல்லை, இடர் இன்று - துன்பம் இல்லை, இனிது துயிலும் இன்று - இனிது தூக்கமும் இல்லை. (ப-பொ-ரை.) பொய் தீர்ந்த வறிவுடையார் பொருளாக விரும்பி யாராய்ந்த குற்றந்தீர்ந்த வீட்டுலகின் மாட்சிமையையுரைப்போமாயின், ஒளியில்லை, உரையில்லை, மாறுபாடில்லை, கேடில்லை, துன்பமில்லை, இனிய துயிலு மில்லை. (க-து.) வீடுபேற்றிற் பகலிரவு முதலாயின இல்லையென்க. பொருள், மெய்ம்மை; ‘பொருளுரை' யென்னும் மணிமேகலையிற்போல வென்க. சுடரின்றென்பது, பகலில்லை யென்றபடி; எனவே அருத்தாபத்தியால் இரவில்லையென்பது முதலாயினவுங் கொள்க. இனிது துயிலு மென்பது ஈறுகெட்டுப் புணர்ந்தது. இச்செய்யுள் வீடுபேற்றிலக்கணத்தை நன்கெடுத்துரைத்ததென்க
|