பக்கம் எண் :

62

68. சாதல் பொருள்கொடுத்த லின்சொற் புணர்வுவத்தல்
நோதற் பிரிவிற் கவறலே - ஓதலின்
அன்புடையார்க் குள்ளன வாறு குணமாக
மென்புடையார் வைத்தார் விரித்து.

(இ-ள்.) சாதல் - நண்பர்கள் இறந்தவிடத்துத் தாமும் பிரிவாற்றாது இறத்தலும், பொருள் கொடுத்தல் - அவர்களுக்கு இல்லாமை வந்தபோது பொருள்கள் உதவி செய்தலும், இன்சொல் - இன்சொல் கூறுதலும், புணர்வு உவத்தல் - அவர்களுடன் கூடியிருத்தலை விரும்புதலும், நோதல் - அவர்கள் வருந்தும் போது தாமும் வருந்துதலும், பிரிவில் கவறலே - அவர்கள் பிரியுங் காலத்தில் உள்ளங் கலங்குதலுமான, ஆறு குணம் - இந்த ஆறு இயல்புகளும், அன்பு உடையார்க்கு - மெய்யன்புடைய உண்மையான நண்பர்களுக்கு, உள்ளனவாக ஓதலின் - இருப்பனவாகச் சான்றோர் கூறுதலால், மென்புடையார் - மென்மை மிக்க புலவர்கள், விரித்து வைத்தார் - தம் நூல்களில் இங்ஙனமே விளக்கி வைத்தார்கள்.

(ப-பொ-ரை.) சாவிற்சாதலும், பொருள் கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், புணர்ச்சி விரும்புதலும், நோவில் நோதலும், பிரிவின் கலங்குதலு மெனு மிவ்வாறு குணமும் நீங்காத வன்புடையார்க் குள்ளனவாக மெல்லிய திறப்பாட்டையுடையார் விரித்துரைத்து வைத்தார்.

(க-து.) சாவின் சாதல் முதலியன உள்ளன்புடையார் செயல்களாம்.

ஓதலின் என்பதில் இன் சாரியை: ஆல் உருபு தொக்கதென்க. அன்புடையார் எனப் பொதுப்படக் கூறினமையின் அன்புடைய நாயகன் நாயகிக்கும் கொள்க.

(68)

69. எடுத்தன் முடக்க னிமிர்த்த னிலையே
படுத்தலோ டாடல் பகரின் - அடுத்துயிர்
ஆறு தொழிலென் றறைந்தா ருயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து.

(இ-ள்.) உயிர் அடுத்த - உடம்பெடுத்த உயிர்களைச் சார்ந்த, தொழில் பகரின் - தொழில்களைச் சொல்லுமிடத்து, எடுத்தல் - உறுப்புக்களை யெடுத்தலும், முடக்கல் - அவற்றை