முடக்குதலும், நிமிர்த்தல் - நிமிரச் செய்தலும், நிலை - நிலைக்கச் செய்தலும், படுத்தலோடு - படுத்தலும், ஆடல் - ஆடலுமாகிய, ஆறு என்று - ஆறாகுமென, உயர்ந்தவர் - அறிவிற் சிறந்தவர்கள், வேறு தொழில் ஆய் - வேறு வேறு தொழில்களாக, விரித்து அறைந்தார் - விளக்கிக் கூறினார்கள். (ப-பொ-ரை.) உறுப்பினை யெடுத்தலும் முடக்கலும், நிமிர்த்தலும், நிற்றலும், கிடத்தலும், ஆடுதலுமெனத் தொழிலாறு வகைப்படும், பகர்வேமாயி னித்தொழில்களையடுத் துயிர் தனது வருத்த முறுந் தொழிலென்றவற்றை யறிந்தார் சொன்னாரொன் றொன்றனோடு வேறுபட்ட தொழிலாக விரித்து. (க-து.) உயிர்களை எடுத்தல் முதலாயின, உடம்பெடுத்த உயிர்களின் தொழில்கள் என்க. அடுத்துயிர் என்பதில் அகரம் விகாரத்தாற் றொக்கது. எடுத்தல் முதலிய நான்கு தொழில்களை மட்டும் உறுப்புக்கட்கென்று உணர்ந்துகொள்க. (69) 70. ஐயமே பிச்சை யருந்தவர்க் கூணாடை ஐயமே யின்றி யறிந்தீந்தான் - வையமும் வானும் வரிசையாற் றானாளு நாளுமே யீனமே யின்றி யினிது. (இ-ள்.) ஐயம் - ஐயமும், பிச்சை - பிச்சையும், அருந்தவர்க்கு - அரிய முயற்சியை யுடையவர்களுக்கு, ஊண் - உணவும், ஆடை - ஆடையுமாகிய இவற்றை, ஐயம் இன்றி - ஐயுறவு இல்லாமல், அறிந்து ஈந்தான் - அவரவ ரியல்புணர்ந்து கொடுத்தவன், வையமும் வானும் - இம் மண்ணுலகத்தையும் வானுலகத்தையும், நாளும் - எந்நாளும், ஈனம் இன்றி - குறைவில்லாமல், வரிசையான் இனிது ஆளும் - முறைமையோடு நன்றாய் அரசாள்வான். (ப-பொ-ரை.) இரந்தவர்க் கையமும், பிச்சையும் அருந்தவர்க்கூணு, முடையில்லாதார்க் குடையு மென்றிந் நான்கினையுங் கொடைப்பயன்களை யறிந் தையமின்றித் துணிந்து கொடுத்தான்; வையத்தையும் வானத்தையு முறைமையானே நாடோறுமாளுங் குறைவின்றி யினிதாக. (க-து.) ஐயம் முதலியவற்றை இயல்பறிந்து கொடுப்பவன் இம்மை மறுமை நலன்களை எய்துவான்.
|