பக்கம் எண் :

64

ஏற்போர்க் கிடுவது ஐயமெனவும், துறவோர் முதலியோர்க்கிடுவது பிச்சையெனவுங் கொள்க. தான்; அசை; நாளுமென்னும் உம்மை முற்று.

(70)

71. நடப்பார்க்கூ ணல்ல பொறைதாங்கி னார்க்கூண்
கிடப்பார்க்கூண் கேளிர்க்கூண் கேடின் - றுடற்சார்ந்த
வானகத்தார்க் கூணே மறுதலையார்க் கூணமைத்தான்
தானகத்தே வாழ்வான் றக.

(இ-ள்.) நடப்பார்க்கு ஊண் - வழி நடப்பவர்க்கு உணவும், நல்ல பொறை - மிக்க சுமையை, தாங்கினார்க்கு ஊண் - தாங்கிக்களைத்தவர்க்கு உணவும், கிடப்பார்க்கு ஊண் - நோயிற் கிடப்பவர்க்கு உணவும், கேளிர்க்கு ஊண் - உறவினர்க்கு உணவும், உடல் சார்ந்த - தன் உடம்பைச் சார்ந்த, வானகத்தார்க்கு ஊண் - வானுலகிலுள்ள தென்புலத்தார்களுக்கு உணவும், மறுதலையார்க்கு ஊண் - அயல்நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு உணவும், கேடு இன்றி அமைத்தான் - கெடுதலில்லாமல் அமைத்துக் கொடுத்தவன், அகத்து - தனக்குரிய மனையில், தக வாழ்வான் - செம்மையாய் வாழ்வான்.

(ப-பொ-ரை.) வழிபோய் வருந்தினார்க் கூணும், சுமையெடுத்து வருந்தினார்க் கூணும், நோய்கொண்டு கிடப்பார்க்கூணும், கேளாயினார்க் கூணும், இறந்துபோய வானகத்தார்க் கூணு மமைத்தவன்றா னின்பத்தோடு வாழ்வான் றகுதிபட்டு.

(க-து.) வழிநடப்பவர் முதலானவர்களுக்கு உணவு கொடுப்பவன் இம்மையில் நல்வாழ்வு பெறுவான்.

‘நல்ல' மிகுதிப் பொருளது : ‘நன்று பெரிதாகும்' என்பது தொல்காப்பியம். ‘வானகத்தார்க்கு ஊண்' என்பது நீர்க்கடனாற்றுதல். ‘மறுதலையா' ரென்பதற்கு இடநோக்கி வேற்று நாட்டாரென்று பொருளுரைக் கப்பட்டது. தென்புலத்தார் - படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்ட கடவுட்சாதியர். தென் திசையிலிருப்பவர்.

(71)

72. உணராமை யாற்குற்ற மோத்தான் வினையாம்
உணரான் வினைப்பிறப்புச் செய்யும் - உணராத
தொண்டிருந் துன்பந் தொடரும் பிறப்பினான்
மண்டிலமு மாகு மதி.