பக்கம் எண் :

66

விரும்புவார்கள், மனை வாழ்க்கை - மனைவாழ்க்கை யென்பது, பற்றுதல் - இவ்வுலகப் பொருள்களிற் பற்றுடையனாய் வாழ்தலாம், பாத்தில் தவம் - நீக்குதல் கூடாத தவவொழுக்கமாவது, இன்றிவிடுதல் - அப்பற்று உள்ளத்திலில்லாதபடி விடுதலும், முன் சொல்லும்மேல் - முதலில் வைத்துக் கூறப்படும் வீடுபே றென்பதில், பற்றுதல் - பற்றுவைத் தொழுகலுமாம்.

(ப-பொ-ரை.) மனை வாழ்க்கையு மாதவமென்று சொல்லப்பட்ட விரண்டு மாட்சிமைப்பட்ட நல்வினை வாழ்க்கையாக விரும்புவார்கள். அவற்றில் மனைவாழ்க்கையாவது பொருளின்மேற் பற்றுடையவனா யொழுகுதலாம். இதன்கண் முற்சொல்லிய மாதவமாவது பொருள்கண்மேற் பற்றுதலின்றி நீங்குதல். இனி யோகமாகிய பாத்திறவமாவ துலகி னுச்சிமேற் பற்றுதலாகிய வீட்டைத் தரும்.

(க-து.) பற்றுவைத் தொழுகும் மனைவாழ்க்கையும். பற்றின்றி யொழுகுந் தவ வாழ்க்கையும் அறிஞர்க்கு நல்வாழ்க்கைகளேயாம்.

மேல் : பண்பாகு பெயர். பாத்து - பகுத்தல். விடுதலும் பற்றுதலுமென எண்ணும்மை கொள்க. மேல் என்பதை இடவாகு பெயராக்கி யோகமாகிய பாத்தில் தவமாவது உலகின் உச்சிமேற்பற்றுதலாகிய வீட்டைத் தரும் எனலுமாம்.

(73)

74. இடைவனப்புந் தோள்வனப்பு மீடின் வனப்பும்
நடைவனப்பு நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல வெண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு.

(இ-ள்.) இடை வனப்பும் - இடுப்பினழகும், தோள் வனப்பும் - தோள்களினழகும் ஈடின் வனப்பும் - செல்வத்தினழகும், நடைவனப்பும் - நடையினழகும், நாணின் வனப்பும் - நாணத்தினழகும், புடைசால் - பக்கங்கள் தசை கொழுவிய, கழுத்தின் வனப்பும் - கழுத்தினழகும், வனப்பு அல்ல - உண்மை அழகாகா; எண்ணோடு எழுத்தின் வனப்பே - மக்கட்கு இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே, வனப்பு - உண்மையழகாகும்.

(ப-பொ-ரை.) இடையினழகும், தோளினழகும், பெருமையினழகும், நடையினழகும், நாணுடைமையினான்வரு மழகும், புடையமைந்த கழுத்தினழகும் அழகல்ல, ஒருவர்க் கெண்ணு மெழுத்து மறிதலாகிய வழகே யழகு.