(க-து.) மக்கட்குக் கல்வியழகே உண்மையழகாம். ஓடு எண்; ஈண்டு எடுத்துக்காட்டப்பட்ட வனப்புக்கள் ஆண் பெண் இரு பாலார்க்கும் ஒத்திருத்தல் உணரற்பாலது. ஏகாரம் : தேற்றப்பொருளது. (74) 75. அறுவர் தந்நூலு மறிந்துணர்வு பற்றி மறுவரவு மாறான நீக்கி - மறுவரவின் மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே ஆசா ரியன தமைவு. (இ-ள்.) அறுவர்தம் நூலும் - அறு சமயத்தாரின் அறு வகைச் சமய நூல்களையும், அறிந்து உணர்வுபற்றி - கற்று ஞான மடைந்து, மறுவரவு ஆன - குற்றமுடையனவான கருத்துக்களையும், மாறு ஆன - மாறுபட்டனவான கருத்துக்களையும், நீக்கி - கழித்து, மறுவரவு இல் - குற்றமில்லாத, மாசாரியனா - சிறந்த ஒழுக்கத்தையுடையவனாய், மறுதலைச் சொல் - நன்மைக்கு மாறான மறுப்புச் சொற்களை, மாற்றுதலே - போக்குதலே, ஆசாரியனது அமைவு - குருவினமைதியாகும். (ப-பொ-ரை.) அறுசமயத்தார் நூலையு மறிந்ததனாலே கூரிய வுணர்வுடையனா யவற்றுட் குற்றமுடைய பொருள்களையு மறுதலைப்பட்ட பொருள்களையு நீக்கி மறித்துப் பிறத்தலில்லாத பெரிய சரிதையை யுடையனா யதன்மாட்டு மறுதலைச்சொல்வராமற் சொல்லுத லாசாரியனுக்கியல்பு. (க-து.) சமய நூல்கள் பலவு முணர்ந்து, தவறு நீக்கியொழுகும் ஒழுக்கமுடையனாய்த் தனக்கு மாறாவார் கூறும் மறுப்புரைகளை மாற்றி நிறுத்தவல்ல ஆற்றலுடையவனே ஆசிரியனாவானென்க. அறுவர் : தொகைக் குறிப்பு; மறுவரவு : தொழிலாகு பெயர். ‘மறுவரவு இல் மாசாரியனா' என்பதற்கு மறித்துப் பிறத்தலில்லாத பெரிய சரிதையை யுடையவனாய் என்பது மொன்று மாறான : வினையாலணையும் பெயர். சாரியன் : முதல் குறைந்தது; ஆசாரமுடையவனென்பது பொருள். ஏகாரம் : பிரிநிலை. அறு சமயமாவன : - உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பட்டாசாரியம். (75)
|