(இ-ள்.) நால் கதியும் - நால்வகைப் பிறப்புக்களிலும், துன்ப நவை - துன்பமென்னும் இழுக்கை, தீர்த்தல் வேண்டுவான் - ஒழித்தலை விரும்புகின்றவன். பால்கதியின் - அந்நால்வகைப் பிறப்புக்களின் நிலைமைகளால், பால்பட ஆராய்ந்து - வகைப்பட ஆராய்ந்து, நூல்கதியின் எல்லை உயர்ந்தார் - நூலாலுணர்த்தப்படும் வரம்பினின்றும் உயர்ந்தவர்களான சான்றோர்களின், தவம் முயலின் - மெய்த் தவத்தினை முயல்வனாயின், மூன்று - அதுதொட்டு அவனுக்கு மூன்றாம் பிறப்பிலேனும், ஐந்து - ஐந்தாம் பிறப்பிலேனும், ஏழ் - ஏழாம் பிறப்பிலேனும், வல்லை - உறுதியாக, வீடு ஆகும் - வீடுபேறுண்டாகுமென, வகு - பகுத்துணர்வாயாக. (ப-பொ-ரை.) தேவர் கதி, நரகர் கதி, விலங்கு கதி, மக்கள் கதி யென்று நான்கு கதியினுமுள்ள துன்பமே, யத்துன்பந்தீர்த்தல் வேண்டுவான் பகுதிப்பட்ட கதிகளின் கூறுபிறழாம லாராய்ந்து நூல்வழியா னெல்லை காண்கின்ற முனிவரது தவத்தை முயல்வனாயின் மூன்றாம் பிறப்பின்கணாத லேழாம் பிறப்பின்கணாதல் விரைந்து வீடாகுமென்று வகுத்துச்சொல்லுக. (க-து.) பிறவித் துன்பத்தை ஒழித்தற்கு விரும்புகின்றவன் மெய்யுணர்ந்து தவம் புரிதல் வேண்டும். நூலளவா லுணரப்படுதன் மேலும் நுகர்ச்சியளவாற்றவம் புரியா நிற்பரென்றற்கு, ‘நூற்கதியின் எல்லையுயர்ந்தார்' எனப்பட்டது. எல்லை யுயர்ந்தார் : ஐந்தன்றொகை. (77) 78. தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார் கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க் கீய்ந்தார் வைத்து வழங்கி வாழ்வார். (இ-ள்.) தாய் இழந்த பிள்ளை - தன் தாயை இழந்த மகவுக்கும், தலை இழந்த பெண்டாட்டி - தன் தலைவனை இழந்த மனைவிக்கும், வாய் இழந்த வாழ்வினார் - பேச்சிழந்த வாழ்க்கையை யுடையவர்களான ஊமைகளுக்கும், வாணிகம் போய் இழந்தார் - வாணிகம் புரிந்து முதற்பொருளை யிழந்தவர்களுக்கும், கைத்து ஊண் பொருள் - உணவுக்கு ஆதரவான செல்வப் பொருளை, இழந்தார் - இழந்தவர்களுக்கும், கண் இல்லவர்க்கு - கண்ணில்லாத குருடர்களுக்கும், ஈய்ந்தார் - வேண்டுவன கொடுத்தவர்கள், வைத்து வழங்கி வாழ்வார் - பொருள்களை மிச்சமாய் வைத்துப் பிறர்க்குக் கொடுத்துத் தாமுந் துய்த்து இனிது வாழ்வார்.
|