‘இழையார் சொற்றேறா' னென்றது, பெண்வழிச் சேறாமையையென்க. இனிப் பிறவென்பது அசைநிலைச் சொல்லெனின், வாளா நூலின் சால்பு சாலுமென் றுரைத்துக் கொள்க. கொன்றை : கொன்றை மலர்க்கு முதலாகுபெயர். கடையில் நின்ற ‘ஏல்' என்பதனைப் பொய்யான் முதலியவற்றோடும் கூட்டுக : கடைநிலைத் தீவகம். நூல் : உவமையாகுபெயர். (5) 6. நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே போறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை வேயன்ன தோளா யிவையுடையான் பல்லுயிர்க்கும் தாயன்ன னென்னத் தகும். (இ-ள்.) வேய் அன்ன தோளாய் - மூங்கிலையொத்த தோள்களையுடைய பெண்ணே, நிறை உடைமை - நெஞ்சடக்க முடைமையும், நீர்மை உடைமை - நல்லியல்புடைமையும், கொடை (உடைமை)யே - வறியார்க்கு ஒன்று கொடுத்தலுடைமையும், பொறை உடைமை - பிறர் தனக்குத் தீங்கு செய்யுங்காற் பொறுத்தலுடைமையும், பொய்ம்மை - பொய் கூறுதலிலும், புலாற்கண் - ஊனுண்ணுதலிலும், மறை உடைமை - மறுத்தலுடைமையும், இவை உடையான் - என்றிவ் வியல்புகளையுடையவன், பல் உயிர்க்கும் - பலவகைப்பட்ட எல்லா உயிர்களுக்கும், தாய் அன்னன் என்னத்தகும் - தாயையொத்தவன் என்று புகழ்தற்குரியவ னாவான். (ப-பொ-ரை.) மூங்கிலையொத்த தோளையுடையவளே! புலன்வழி போகாது தன் மனதை நிறுத்தலுடைமையும், நற்குணமுடையனாதலும் ஈதலும் பொறுமையோடிருத்தலும், பொய்கூற விடாது தன்னை யடக்குதலும், ஊன் தின்னவிடாது தன்னையடக்குதலும் ஆகிய இவ்வாறும் பொருந்திய ஒருவன், பல உயிர்கட்கும் தாயினது அன்புபோலும் அன்பினையுடையவன் என்று யாவருஞ் சொல்லத்தகுந்தவன் ஆவன். (க-து.) நிறையுடைமை முதலியன உடையவன் பல்லுயிர்கட்கும் நன்மை செய்பவ னாவான். ஓருயிர்க்கே தாயாந் தன்மை தரும் உடலுறவு போல்வதன்றி, இயல்புறவு பல உயிர்கட்குந் தாயாந்தன்மை தரலின், இங்ஙனங் கூறப்பட்டது. ஏகாரம், எண்; ஏனையவற்றோடும் ஒட்டுக. நிறை, பொறை, மறை என்பன தொழிற் பெயர்கள்
|