பக்கம் எண் :

70

(ப-பொ-ரை.) தாயை யிழந்த குழவியும், தலைவனையிழந்த பெண்டாட்டியும், வாயில்லாத மூங்கைகளும், வாணிகம் போய்ப் பொருளிழந்தாரும் ‘உண்ணுதற் காதாரமாய பொருளை யிழந்தாரும்' கண்ணில்லாதாரு மென்னு மிவர்கட்குப் பொருள் கொடுத்தார் மேலைக்கு வைத்து வழங்கி வாழ்வார்.

(க-து.) தாயில்லாத பிள்ளை முதலானவர்க்கு வேண்டுவன கொடுத்துதவல் வேண்டும்.

நான்கனுருபைப் பிறவற்றிற்குங் கூட்டுக. எண்ணும்மை விரித்துரைக்க, வாணிகம் போய் என்பது, வாணிகத்தின் மேற்சென்றென்றற்கு. ஆவது அத்தொழில் புரிந்தென்பதாம்.

(78)

79. சாக்காடு கேடு பகைதுன்ப மின்பமே
நாக்காடு நாட்டறை போக்குமென - நாக்காட்ட
நட்டார்க் கியையிற் றமக்கியைந்த கூறுடம்
பட்டார்வாய்ப் பட்டது பண்பு.

(இ-ள்.) சாக்காடு - சாவும், கேடும் - இடையூறும், பகை - பகைமையும், துன்பம் - வருத்தமும், இன்பமே - மகிழ்ச்சியும், நாக்கு ஆடுநாடு அறை - நாவினாற் சொல்லப்படுகின்ற நட்டாரது பழிச்சொல்லில், போக்கும் என - பொருந்துதலான பழியுமென, நாக்காட்ட - நாவினாற் பேசப்படுவனவான இவைகள், நட்டார்க்கு இயையின் - நண்பர்களுக்குப் பொருந்தினால், தமக்கு இயைந்த கூறு - அவற்றுள் தமக்குரிய பங்கை, உடம்பட்டார் வாய் பட்டது - ஏற்க உள்ள மொத்தவர்கள்பால் காணப்படும் இயல்பே, பண்பு - நல்லியல்பாம்.

(ப-பொ-ரை.) சாக்காடுங் கேடும் பகையும் துன்பமுமின்பமுஞ் சொல்லப்படுகின்ற நாட்டறை போக்குமென்று சொல்லப்பட்ட விவை நட்டோர்க்கு வருமாயின் மற்றொன்று நாவாடாது தமக்கியைந்த கூறுவுடம்பட்டார் கண்ணேயுள்ள குணம்.

(க-து.) பிறர்க்கு வருஞ் சாக்காடு முதலியவற்றைத் தமக்கு வந்தாற்போற் காணுமியல்பே, நல்லியல்பெனப்படுமென்க.

நாக்குக்கு, ஆடுதலென்பதே பேசுதலென்க; நாடு : நாட்டாரைக் குறித்தலின், ஆகுபெயர்; அறை : தொழிலாகு பெயராய்ச் சொல்லை யுணர்த்திற்று. நாட்டறைபோக்கு மெனப்பட்டது, ஈண்டுப் பழியை யென்றுணர்ந்து கொள்க. நாக்காட்ட : வினையாலணையும் பெயர்.

(79)