பக்கம் எண் :

71

80. புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார் போக்கில்
நிலையாளர் நீர்மை யிழந்தார் - தலையாளர்க்
கூண்கொடுத் தூற்றா யுதவினார் மன்னராய்க்
காண்கொடுத்து வாழ்வார் கலந்து.

(இ-ள்.) புலையாளர் - தாழ்ந்த நிலைமையிலுள்ளவர்களுக்கும், புண்பட்டார் - உடம்பிற் புண்பட்டவர்களுக்கும், கண்கெட்டார் - குருடர்களுக்கும், போக்கில் நிலையாளர் - அயல் நாடுகளுக்குச் செல்வதிலேயே நிலையா யிருப்பவர்களுக்கும், நீர்மை இழந்தார் - தங்கள் மேல்நிலைமையை யிழந்தவர்களுக்கும், தலையாளர் - சிறந்த நிலையினை யுடையவர்களுக்கும், ஊற்று ஆய் - ஆதரவாய், ஊண் கொடுத்து உதவினார் - உணவு கொடுத்து உதவி செய்தவர்கள், மன்னர் ஆய் - அரசர்களாய், கொடுத்து - வறியார்க்கு வழங்கி, கலந்து வாழ்வார் - உறவினருடன் கூடி மகிழ்ச்சியாய் வாழ்வார்கள்.

(ப-பொ-ரை.) தாழ்வை யுடையவர்களுக்கும், உடலிற் புண்பட்டவர்களுக்கும், நாடு சுற்றி வருவதில் நிலைகொண்டிருப்பவர்களுக்கும், மேன்மைத்தன்மை யிழந்தவர்களுக்கும், ஆதரவாய் உணவைக் கொடுத்துதவி செய்தவர்கள்; அரசர்களாய் அடுத்து ஏற்போர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து நண்பர் முதலியவருடன் கூடி இன்புற்று வாழ்வார்.

(க-து.) புலையாளர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்தவர்கள், மறுமையில் மன்னராய் வாழ்வார்.

தலையாளர்க்கு என்பதிலுள்ள நான்கனுருபைப் புலையாளர் முதலிய ஐந்தனொடுங் கூட்டுக. ‘ஊற்றா' யென்றார், தமக்கு இடுக்கு வந்த காலத்தும் பிறர்க்கு உதவல் வேண்டுமென்றற்கு, மேன்மேலுதவுவதற்கென்றும் உரைத்துக்கொள்க. ஊற்றாயுதவி என்றியைத்து ஊற்றுநீர்போ லுதவி செய்து எனலுமாம். காண் : முன்னிலையசை.

(80)

முற்றும்.