பக்கம் எண் :

8

நிறை, உள்ளத்தைத் தீய வழியிற் செல்லவொட்டாமல் நிறுத்துதல். பொய்ம்மையும் புலாலும் அவைதம்மைப் பயிறலின் மேனின்றன.

(6)

7. இன்சொ லளாவ லிடமினிதூண் யாவர்க்கும்
வன்சொற் களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் நாளும்
விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து.

(இ-ள்.) முருந்து ஏய்க்கும் - மயிலிறகின் அடியை ஒக்கும், முள் எயிற்றினாய் - கூரிய பற்களையுடைய பெண்ணே!, யாவர்க்கும் - விருந்தாய் வருவாரெல்லாருக்கும், இன்சொல் - இன்சொல்லும், அளாவல் - உள்ளங்கலந்த உறவும், இடம் - தங்குமிடமும், இனிது - ஆடையணி முதலிய பொருளும், ஊண் - உணவும், வன்சொல் களைந்து - கடுஞ் சொற்களை நீக்கி, மென்சொல் - பணிவு மொழியும், நாளும் வகுப்பானேல் - என்றும் முறையே வழங்குவானானால், விண்ணோர் - தேவர்கள், விரைந்து - முன் வந்து, விருந்து ஏற்பர் - அவனை விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.

(ப-பொ-ரை.) மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலியினது அடியையொத்து விளங்கும் கூரிய பல்லையுமுடையாய்! தன் மனை நோக்கி வரும் விருந்தினர் யாவரிடத்தும் இன்சொற் கூறலும், கலந்துறவாடலும், இருக்கையுதவலும், அறுசுவை யுண்டியளித்தலும் செய்து, கடுஞ்சொலொழித்து மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பானாயின் எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.

(க-து.) விருந்தினனுக்கு இன்சொல் முதலிய வழங்கு வானுக்கு மறுமையில் இன்பமுண்டாம்.

விருந்தினராய், எதிர்வார்க்கு முறையே ஒருவன் செய்யற் பாலவான கடமைகள் ஈண்டு எடுத்தோதப்பட்டன. இன்சொல் முதலிற் கூறும் வரவேற்பு மொழியெனவும், மென்சொல் இறுதியிற் கூறும் பணிவு மொழியெனவுங் கொள்க. இம்மையிற் சிறந்தாரை மறுமைக்கண் விண்ணுலகோர் வரவேற்பரென்பதைப் "புகழுடையோர், விசும்பின் வலவ னேவா வானவூர்தி யெய்தும்" (27) என்னும் புறநானுற்றினுங் காண்க அளாவல் - அளாவு : பகுதி

(7)