8. உடன்படான் கொல்லா னுடன்றார்நோய் தீர்த்து மடம்படான் மாண்டார்நூன் மாண்ட - இடம்பட நோக்கும்வாய் நோக்கி நுழைவானேன் மற்றவனை யாக்குமவர் யாக்கு மணைந்து. (இ-ள்.) உடன்படான் - பிறர் கொலை செய்வதற்கு உடன்படாமல், கொல்லான் - தானும் ஓருயிரைக் கொல்லாமல் உடன்றார் நோய் - பிணிப்பட்டு வருந்துகிறவர்களின் நோயை, தீர்த்து - மருந்து முதலியன உதவி நீக்கி, மடம் படான் - அறியாமையில் மயங்கானாய், மாண்டார் நூல் - அறிவு மாட்சிமைப்பட்ட சான்றோருடைய நூல்களை, மாண்ட இடம்பட - சிறந்த கருத்துக்கள் புலனாம்படி, நோக்கும் வாய் நோக்கி - ஆராய்வதற்குரிய இடத்தில் ஆராய்ந்து, நுழைவானேல் - அதற்குத் தக ஒழுகுவானேல் அவனை - அவ்வியல்பினனை, யாக்குமவர் - நண்பராக்கிக் கொள்வாரை, அணைந்து - மேற்கூரிய ஒழுக்கங்களெல்லாம் பொருந்தி, யாக்கும் - மேம்படுத்தும். (ப-பொ-ரை.) ஒன்றினைப் பிறர் கொல்ல உடன்படாது, தானுங் கொல்லாது, பிணியால் வருந்தினார் நோயைத் தீர்த்து பேதைமையின்கட் படாதே, மாட்சிமைப்பட்டார் நூல்களின் மாட்சிமைப்பட்ட குணங்க டனக்குப் பெருகும்படி யாராயுமாயின், தானாராய்ந்தவற்றின்கணுள்புக் கொழுகுவனாயின், அவனை யணைந்தார்க்கு நெறியெல்லாங் கூடியாக்கும். (க-து.) நல்லாரோடு இணங்குவார்க்கும் அந் நல்லன உண்டாகும். உடன்படான் கொல்லான் முதலியவற்றை முற்றெச்சமாக்கிக்கொள்க. ‘இடம்பட'வென்றவிடத்து இடமும், ‘நோக்கும் வாய்' என்றவிடத்து வாயும் ஈண்டுக் கருத்தென்னும் பொருள்மேலன. இதில் உடன்படாமை, கொல்லாமை, தீர்த்தல், மடம் படாமை, நோக்கல், நுழைதல் என்ற ஆறு பொருளும் அமைந்திருத்தல் காண்க. (8) 9. கற்றாரைக் கற்ற துணரா ரெனமதியார் உற்றாரை யன்னண மோராமல் - அற்றார்கட் குண்டி யுறையு ளுடுக்கை யிவையீந்தார் பண்டிதராய் வாழ்வார் பயின்று.
|