கண்டோர் கூறின் அடுத்த பதிப்பின் வெளிப்படுத்த முயல்வேன். சிற்சில இடங்களில் வ. உ. சி. அவர்கள் விளக்கத்திற்கும் கருத்துக்கும் மாறு பட்டிருப்பினும் இலக்கண மாறுபாடின்றி உரை வரையப்பட்ட தென எண்ணுக. "இந்நூல், அறப்பால், பொருட்பால், இன்பப்பால் வீட்டுப்பால் என நான்கு பகுதிகளாகவும், அவற்றில் வீட்டுப்பால் "இல்லியல்" துறவியல் என இரண்டியல்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. அறப்பால் பத்து வெண்பாக்களையும், பொருட்பால் ஒன்பது வெண்பாக்களையும், இன்பப்பால் பன்னிரண்டு வெண்பாக்களையும், வீட்டுப்பால் (இல்லியல் எட்டு வெண்பாவும், துறவியல் ஆறு வெண்பாவுமாக) பதினான்கு வெண்பாக்களையும், கொண்டுள்ளன" என்பது வ. உ. சி அவர்கள் முன்னுரை. அவ்வாறே பால் இயல்கள் பகுக்கப்பட்டுள்ளன. என்னாலியற்றப்பட்டவுரை இக்காலத்துக்கேற்ற எளிய நடையாம். வ. உ. சி. அவர்கள் விருத்தியுரை வரைந்து பல சங்க நூல்களிலிருந்து மேற்கோள் பல காட்டிக் கருத்துக்களை விளக்கி யிருக்கின்றனர். அத்துணை விளக்கம் வேண்டுவதின்று இந்நூலுக்கு என்று கழகத்தார் கருத்திருக்கும் குறிப்பறிந்து அதற்கியைந்தவாறு வரையப்பட்டதென வுணர்க. இன்னிலை கடவுள் வாழ்த்து | வேலற் றரீஇய விரிசடைப் பெம்மான் | | வாலிழை பாகத் தமரிய கொழுவேற் | | கூற்றங் கதழ்ந்தெறி கொன்றையன் | | கூட்டா வுலகங் கெழீஇய மலிந்தே. | | - பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது. | (சொற்பொருள்) வேலன் தரீஇய விரிசடை பெம்மான்-முருகனைப் பயந்த விரிந்த சடையையுடைய பெருமானும், கொழு வேல்கூற்றம் கதழ்ந்து எறி கொன்றையன்-மழுவாயுதத்தையுடைய இயமனைச் சினந்து கொன்ற கொன்றைமாலை புனைந்த வரும் (ஆகிய சிவபெருமான்) பாகத்து வால் இழை அமரிய-இடப்பாகத்தில் உமை:அமர்ந்திருப்ப, கூட்டா உலகம் மலிந்து கெழீஇய-(அதனால்) துணையாக எல்லாவுலகங்களும் பெருகி விளங்கின. (கருத்து) சிவபெருமான் ஓர்பாகத்தில் உமையையமர்ந் திருப்ப எல்லாவுலகங்களும் விளங்கினவாதலால் அச்சிவபெருமானை வணங்குவோம். (விளக்கம்) இஃது படர்க்கைப் பரவல். "வேலற்றரீஇய" என்றதனால் படைத்தற்றொழிலும், அவ்வேலனால் இந்திரன் முதலியவரைப் புரப்பித்தலின் காத்தற்றொழிலும், "கூற்றம் கதழ்ந்தெறி" என்றதனால் துடைத்தற் றொழிலும் ஆகிய முத்தொழிலும் உடையவன் என்பதைக் குறிப்பினுணர்த்தினார். கூற்றத்தை மீண்டும் எழுப்பியதால் மறைத்தல், அருளல் ஆகிய இருதொழிலும் உள்ளடங்கியிருத்தலும் காண்க. சத்தியும் சிவமும் கூடியே உயிர்களையீன்று புரந்து உலகைநிலை பெறுத்துகின்றனர் என்பது தோன்ற "வாலிழை பாகத்தமரிய" என்றார்.
|