நூல் அறப்பால் அறத்தைப் பற்றிக் கூறும் பகுதியெனப்பொருள் படும். ஆடவர்க்குரிய உறுதிப்பொருளாகிய அறம், பொருள், இன்பம். வீடு என்ற நான்கின் முதல் நிற்பது அறம். ஆதலின் அறப்பால் முதலின் வைக்கப்பட்டது. வெண்பா 1. | அன்றமரிற் சொற்ற வறவுரைவீழ் தீக்கழுது | | மன்று யர்ந்து போந்த வகைதேர்மின்-பொன்றா | | அறமறிந்தோன் கண்ட வறம்பொருள்கேட் டல்லன் | | மறமொறுக்க வாய்த்த வழக்கு. | (சொ-ள்) அன்று-முற்காலத்தில், அமரில் சொற்ற அறம் உரைவீழ் தீ கழுது-பாரதப்போரில் (கண்ணன் அருச்சுனற்குக் கூறிய கீதையாகிய) அறவுரையை விரும்பிக்கேட்ட கொடிய பேயானது, உயர்ந்து மன்று போந்த வகை தேர்மின்-(அறிவால்) உயர்வுற்று ஆன்றோரவையைப் போய்ச்சேர்ந்த வகையை ஆராய்வீர், பொன்றா அறம் அறிந்தேன் கண்டவறம் பொருள் கேட்டு - அழியாத தருமங்களையுணர்ந்தோன் அறிந்து கூறிய அறநூலினையும் பொருள் நூலினையும் (நீங்கள்) கேட்டு, அல்லல் மறம் ஒறுக்க - துன்பத்தை விளைக்கும் பாவங்களை நீக்குக, வாய்த்த வழக்கு(இது) - பொருந்திய நன்னெறி இதுவேயாம். (க-து) கொடிய பேயும் அறவுரை கேட்டுயர்ந்தது; ஆதலால் மக்களாகிய நீங்களும் ஆன்றோரறவுரை கேட்டுப் பாவம் நீக்கி வாழ்க.
|