பக்கம் எண் :


16

இருண்டவளையலை யணிந்த மங்கையரின்பத்தை விரும்பியவர், மேற்பால் ஆக்கார் - முத்திக்குரிய செயல்கள் ஒன்றும் செய்யார், ஆம் ஆறு அருள் இழையார் தாமும் அது - தம்மாலியன்றவாறு பிறவுயிர்கள் மேல் அருள் புரியாதவர் நிலைமையும் அதுவேயாம்.

(க-து) பொருளை விரும்புவோரும் இறைவனருளை விரும்புவோரும் உடல் நலம் பேணாமல் எப்போதும் உழைப்பார். மாதர் சிற்றின்பத்தை விரும்புவோரும் பிறவுயிர் மேல் அருள் புரியாதவரும் முத்திக்குரிய செயல் புரியார்.

(வி-ம்) மேன்மேலும் பொருளீட்ட விரும்புவோர், காடு, கடல் இவற்றைக் கடந்து சென்று தங்கியும், பனியால் நனைந்தும், வெயிலால் வெம்பியும் பகலிரவென்று கருதாமல் உண்ணாமலும் உறங்காமலும் உழைப்பார் ஆதலால் "பொருள் விழைவார் உடல் நலம் போற்றார்" என்றார். மலைவனங்கடோறும், வீணாகவுலைந்தலைந்து மிகுதன மார்ச்சிப்பதுவே விரதமாக, ஊணாசைகாய் கனியாவுடுப்பது மோர் முழத்துண்டாய்" என்ற அடிகள் பொருளீட்டுவார் உழைப்பைப் புலப்படுத்துவது காண்க. இறைவனருளைப் பெற விரும்புவோரும், விரதம், நோன்பு புரிந்து இரவும் பகலும் இறைவனையே நினைந்து நினைந்துருகிப் பாடிப்பரவசமாய் உரிய காலத்து உண்பதும் உறங்குவதும் இன்றி அழுதும் தொழுதும் அவனடியே பற்றி வாழ்வர். ஆதலால் "அருள் விழைவார் அஃதே" என்றார், "கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணாதிரவும் பகலும் நானவையே யெண்ணு மதுவல்லால், மணிமேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ" என்ற மணிவாசகர் திருவாக்கினையும் நோக்குக. நீல் என்ற அடையால் இழையார் என்பதற்கு வளையலை யணிந்தவர் எனப்பொருள் கூறப்பட்டது. மேற்பால்=முத்தி. எல்லாப்பதங்களிலும் மேலானது. ஆதலின் முத்தியை விரும்புவோர், சிற்றின்பத்தை வெறுத்துப் பிறவுயிர் மேலருள் செய்ய வேண்டும் என்று தெளிக.