இதனுடன் பொருத்துக. புறாவைப் பிடித்துக்கூட்டிலடைப்பதும் பாவமாகும் என்பதும் அப்பாவத்திற்கு மறுமையில் காலில் விலங்கு பூட்டிச் சிறையிலடைக்கப்படுவான் என்பதும் முன்னிரண்டடியின் கருத்தாகும். "இரும் பார்க்குங்காலரா யேதிலார்க்காளாய்க், கரும்பார் கழனியுட் சேர்வர்-சுரும்பார்க்குங், காட்டுளாய் வாழுஞ் சிவலுங் குறும் பூழுங், கூட்டுளாக்கொண்டுவைப்பார்" எனற நாலடியும் இதற்குத் துணைசெய்வதாம். இறைவன் திருவடிநிழல் எங்கும் பரந்து இன்பம் தருவதால் "விரி நிழல்" என்றார். தீப்பழுவம்-நெருப்புப் போன்ற காடு; இது உவமையாகு பெயராய் நரகத்தையுணர்த்தியது. அழகிய புறாவின் குரல்போலக் கூவிப் புறாவைப்பிடிப்பது எளிதாம் என்றும் அங்ஙனம் பிறவுயிரை வருத்தாது பிடித்து வளர்ப்பினும் அதுவும் பாவச் செயலாம் என்பதும் இதனால் விளங்கும். (கு-பு) குரல் கூவி-உவமத்தொகை. சிமிழ்த்தோன்-வினையாலணையும் பெயர். ஒலிக்கும்-ஒலிப்பான்-இது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று ஆண்பாலுக்கு வந்தது. ஓராதார், உய்ப்பர் எய்தார் என வினைமுடிவு செய்க. ஓராதார்-எழுவாய். | 4. | கழிவிரக்கங் கொள்ளார் கதழ்வாளார் வேர்த்துப் | | பழிமுறுகக் கோடார் பயன்பேர்த்-தழிமுதலை | | யில்லங்கொண் டாக்காரிடும்பைத் தளைதணப்பர் | | நல்லறனை நாளணிகொள் வார். |
(சொ-ள்) கழிவு இரக்கம் கொள்ளார்-தம்மிடமிருந்து நீங்கிய பொருள்களைக் குறித்து வருந்தாதவரும், கதழ்வு ஆளார்-சினத்தைமேற்கொள்ளாதவரும், வேர்த்து பழிமுறுக கோடார்-வெகுண்டு பழி மிகுதியாகும்படி அதற்குரிய செயல்களைச் செய்யாதவரும், பயன் பேர்த்து அழிமுதலை இல்லம் கொண்டு ஆக்கார்-அறப்பயனை நீக்கிக் கெடுக்கும் முதற் பொருளைத் தமது மனையிற் கொண்டுபோய்ச் சேர்த்துச் செல்வத்தைப் பெருக்காத வரும் (ஆகிய அறிஞர்) இடும்பை தளை தணப்பர்-துன்பமாகிய கட்டினை யறுப்பார், நல் அறனை நாள் அணிகொள்வார். நன்மையைத் தரும் அறத்தை நாள்தோறும் தமக்கு அணியும் அணியாகக் கொள்வார்.
|