பக்கம் எண் :


19

(க-து) கழிந்த பொருட்கு இரங்காதவர், சினங்கொள்ளாதவர், பழிச்செயல் புரியாதவர், பாவத்தால் பொருள் ஈட்டாதவர் ஆகிய இவரே துன்பத்தின் நீங்கி அறம்புரியும் அறிஞராவர்.

(வி-ம்) கழிவிரக்கம் எப்போதும் கவலையுண்டாக்கும்; கதழ்வு காரணமாகப் பகையுண்டாகிப் பல துன்பம் விளையும்; பழிச்செயல் செய்பவன் பிறராற் பழிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவான்; அழிமுதலை இல்லத்தில் வைத்தால் அது பெருகாது குறைந்து நாளுக்கு நாள் கவலையையுண்டாக்கும் ஆதலால் இவற்றை யொழித்தவர்களே "இடும்பைத் தளை தணப்பார்" என்றார். இந்நான்கு தீப்பண்புகளையும் விடுத்தவரே ஒவ்வொரு நாளும் அறஞ்செய்வர் என்னுங் கருத்தால் "நல்லறனை நாளணிகொள்வார்" என்றார். "கற்றார் முற்றோன்றா கழிவிரக்கம்" என்ற நான்மணிக்கடிகையின் கருத்தும், "மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய பிறத்தலதனால் வரும்" என்ற குறட் கருத்தும், "பிறர் பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக் குறைபதி யென்னும் உலகு" என்ற குறட் கருத்தும் "சலத்தாற் பொருள் செய்தேமார்த்தல் பசுமட்கலத்துணீர் பெய்தி ரீஇயற்று" என்ற குறட் கருத்தும் அந்நான்கினையும் வலியுறுத்துதல் காண்க. கழிவிரக்கமும், கதழ்வும், பழிச்செயலும், அறப்பயனைக் கெடுக்கு முதலை அகத்து வைத்திருத்தலும் அறிஞர் செயலாகா என்பதும் அவற்றால் துன்பம் விளையுமேயன்றி இன்பம் விளையா என்பதும் அறம் புரிவதற்கும் இவை தடையாம் என்பதும் இதனால் விளங்கும்.

(கு-பு) கழிவிரக்கம் நான்காம் வேற்றுமைத்தொகை. அழிமுதல்-அழிக்குமுதல் வினைத்தொகை. இடும்பைத் தளை-பண்புத்தொகை. கொள்ளார், ஆளார், கோடார், ஆக்கார் என்பன எதிர்மறை வினையாலணையும் பெயர்கள். தணப்பார், கொள்வார் என்பன உடன்பாட்டு வினைமுற்று. (4)