பக்கம் எண் :


20
5.திரைத்த விரிக்கிற் றிரைப்பினா வாய்போ
லுரைத்த வுரையதனைக் கேட்டு-முரைத்த
பயன்றவா செய்வார் சிலரேதந் நெஞ்சத்
தியன்றவா செய்வார் பலர்

(சொ-ள்) திரைத்த விரிக்கின் - சுருட்டிய பாய்களை விரித்தால். (விரித்த) திரைப்பின் - விரித்தபாய்களைச் சுருட்டினால். நாவாய்போல்-கப்பல் (மாலுமி குறித்த இடத்திற்குச் செல்வது) போலவும், (காற்றின் வழியே செல்வது) போலவும், உரைத்த உரையதனை கேட்டும்=அறிஞர் கூறிய அறவுரைகளைக் கேட்டும், உரைத்த பயன்தவா செய்வார் சிலரே - (அவர்) கூறிய அறிவுரையின் பயன் கெடாமல் நல் வினைகளைச் செய்வார் சிலரே (உள்ளனர்) , தந்நெஞ்சத்து இயன்றவா செய்வார் பலர்-தம்மனம் போன போக்காக (தீவினைகளைச்) செய்வார் பலர் (உள்ளனர்) .

(க-து) அறவுரைகேட்டும் பலர் நன்னெறி யொழுகாது தீயவழியிற் செல்கின்றனரே இதுமிகவும் வருந்தத்தக்கது. எல்லாரும் நல்வாழ்வு வாழப் பழக வேண்டும்.

(வி-ம்) விரிக்கின் நாவாய்போல், திரைப்பின் நாவாய்போல் எனக் கொண்டுகூட்டுக. விரிக்கின் நாவாய் செல்லுமாறும் என வருவித்துப் பொருள் கொள்க. பண்டைக் காலம் பாய்மரக் கப்பல்கள் இருந்தன; பாய்மரத்தில் பாய்சுருட்டிக் கட்டப்பட்டிருக்கும்; கப்பலோட்டி தான் குறித்த இடத்திற்குக் கப்பல் செல்ல வேண்டுமானால் காற்று வருந்திசையையறிந்து பாயை விரித்துக் கட்டுவான்; அது அவன் குறித்த இடத்திற்குச் செல்லும். பாயைச் சுருட்டி விட்டாற் குறித்த இடத்திற்குச் செல்லாது சுழன்று திரியும். இச்செயல்களையறிந்து உரைத்த உரையறிந்து அதன் வழியே செல்லும் அறிஞர்க்கும் செல்லாத மூடர்க்கும் உவமைகாட்டினார். பாய்விரித்துக் கட்டிய கப்பல் மாலுமி குறித்த இடத்திற்குச் செல்லவேண்டியது இயற்கை. அறிவுரை கேட்டவர்கள் திருந்தவேண்டியது இயற்கை. இவ்வியற்கைக்கு மாறாகச்சிலர் திருந்தியும் பலர் திருந்தாதும் இருப்பதற்குக்காரணம் யாது? பேதைமை