| 7. | தாமீட் டருவினைக டண்டா வுடம்பொன்ற | | நாமீட் டொறுக்கொணா ஞாங்கரடித் தீம்பால் | | பிதுக்கப் பெயல்போற் பிறப்பிறப்புப் போகா | | கதுப்போ டிறுத்தல் கடன். |
(சொ-ள்) தாம் ஈட்டு அருவினைகள் தண்டா-தாமே புரிந்து சேர்த்த அருமையான நல்வினை தீவினைகள் செய்தவர்களை விட்டு நீங்கமாட்டா. உடம்பு ஒன்ற நாம் மீட்டு ஒறுக்க ஒணா-உடம்புடன் பொருந்தியிருக்க நம்மால் வினைகளை மீண்டும் நீக்க முடியா; ஞாங்கர் அடி தீம்பால் பிதுக்கப் பெயல் போல்-உள்ளிடத்திலுள்ள இனிய பாலானது பிதுக்கப் பிதுக்க வெளி வருவதுபோல, பிறப்பு இறப்பு போகா பிறவியும் சாவும் அடுத்தடுத்து வரும்; கதுப்போடு இறுத்தல் கடன்-மூட்டொடு அப்பிறவியைக் கெடுப்பதுவே மக்கள் கடமையாகும். (க-து) அவரவர் செய்தவினைகள் அவரவரை விட்டு நீங்கா. செய்தவர்களாலும் திரும்பவும் அவற்றை நீக்கமுடியா. வினையுள்ளவரையும் பிறவியும் ஒழியாது. ஆதலால் வினையைக் கெடுத்துப் பிறவியை நீக்குவதே மக்கள் கடமையாம். (வி-ம்) தாமே செய்த வினையைத் தாமே போக்க முடியாது அவ்வினையும் அதன்பயனை ஊட்டாமல் நீங்காது என்பதை விளக்க "தாமீட்டருவினை" என்றார். நம் உடம்பில் நாம் செய்த தீவினைவந்து பொருந்தும்போது அதனைத் தடுக்கவும் முடியாது என்பார். "நாம் மீட்டொறுக்கொணா" என்றார். பிதுக்க பிதுக்க மடியிலிருந்து பால் வெளிவருவதுபோல் வினைசெய்ய செய்யப் பிறவியும் வரும் என உவமை விளக்கம் காண்க. பிறப்பும் இறப்பும் துன்பத்தை மிகுவித்தலால் பிறவியொழிப்பதைக் கடமையாகக்கொள்க என்பார். "கதுப்போடிறுத்தல் கடன்" என்றார். கதுப்பு இங்கு மூட்டுவாய் என்பதையுணர்த்தும். ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் இடம் மூட்டுவாய். அதனையறுக்கவே பற்று நீங்கித் தனித் தனியாகப் பிரிந்துவிடும். வினையை வேரறுக்க வேண்டும். அதுவே பிறவியை யறுக்கும் வழியென்பார். "கதுப்போடிறுத்தல்" என்றார். வினை நீங்கியபோது பிறவியும் நீங்கும் என்பது கருத்து.
|