(கு-பு) ஈட்டுவினை அருவினை யெனக்கூட்டுக. தண்டா-எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று. ஒறுக்க என்பது அகரங் குறைந்து நின்றது. ஒண்ணா என்பது ஒணா என இடை குறைந்து நின்றது. இவை தொகுத்தல் விகாரம். தீ-இனிமை. பிறப்பு இறப்பு என்பவை போகா என்னும் வினைமுற்றைக் கொண்டன. இறுத்தல்-கெடுத்தல் இது தொழிற் பெயர். (7) | 8. | தூயசொல் லாட்டுந் துணிவறிவுந் துன்பங்கள் | | தோயக் கலங்காத் துணைவலியும்-பூயல் | | படுக்குந் திருவத்த னாரே பறிப்பர் | | அடுக்கு மடிச்சேரா வாறு. |
(சொ-ள்) தூய சொல்லாட்டும்-தூய்மையான சொற்களைப் பேசுவதும்; துணிவு அறிவு-(அறிஞர் உண்டென்று ஆய்ந்து) துணிந்தபொருளை யறிவதும், துன்பங்கள் தோய கலங்காதுணை வலியும் - கவலைகள் வந்து பொருந்தியபோது மனங் கலங்காத வளவு வலிமை பெற்றிருப்பதும், பூயல் படுக்கும் திருவத்தனாரே-(ஆகிய இவற்றை) பொருந்தச் சேர்க்கும் செல்வத்தினையுடையவரே, அடுக்கும் மடி சேராவாறு பறிப்பர்-அடுக்கி வருகின்ற பிறவியிற் சேராதவாறு அதனைக்களைவர். (க-து) தூயசொற் பேசுதலும், செம்பொருட்டுணிவும், துன்பத்திற்குக் கலங்காத மனவலிமையும் உடையவன் பிறவியை நீக்குவான் என்பது. (வி-ம்) தூயசொல் என்பது பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனில்சொல் என்ற நான்கினையும் நீக்கிப் பேசுஞ் சொல்லையுணர்த்தியது. வாய்மையும் இன்சொல்லும் எனக் கொள்க. துணிவு அறிவு என்பது துணிவினை அறியும் அறிவு எனப் பொருள்படும். கடவுள் உண்டு, இம்மை, மறுமை, நல்வினை, தீவினை, முத்தி, நரகம் இவையுண்டு என்று சான்றோர் துணிந்தவற்றைத் தானும் அறிந்து கொள்ளல். "உலகத் தாருண்டென்பதில் லென்பான் வையத் தலகையா வைக்கப்படும்" என்று வள்ளுவர் கூறியபடி உண்டென்பது இல்லையென்பவன் மனிதனல்லன். அவன் ஒரு பேய்;
|