ஆதலால் அறிஞர் உண்டு என்பதை உண்டு என்று துணிபவனே மக்களில் ஒருவனாக மதிக்கப்படுவான். "இடுக்கண் வருங்கா னகுக வதனை, யடுத்தூர்வ தஃதொப்ப தில்" என்று வள்ளுவர் கூறி யாங்கு மனமகிழ்வுடன் நகை முகங்கொண்டு துன்பத்தைப் போக்க வேண்டுமேயன்றிக் கலங்குதல் கூடாது. கலங்குவோன் தான் செய்யும் வினையைக் காலமறிந்து செய்யாமற் கைவிடுவான். அதனாற் கலங்காத வறிவும் வேண்டும் என்பது கருத்து. இம்மூன்றும் உடையவன் எவனோ அவன் பிறவியைக் களைந்து முத்தியடைவன் என்பது சொல்லப்பட்டது. (கு-பு) ஆட்டு-தொழிற்பெயர். பாட்டு என்பதுபோல். துணிவறிவு-இரண்டனுருபும் பயனும் உடன் தொக்க தொகை. கலங்கா-ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பூயல்-பொருந்துதல். மடி-வயிறு; இது பிறவியையுணர்த்தியது. (8) | 9. | கடன்முகந்து தீம்பெயலை யூழ்க்கு மெழிலி | | மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்த லேமம் | | படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு. |
(சொ-ள்) எழிலி-மேகமானது, கடல் முகந்து தீ பெயலை ஊழ்க்கும்-கடலினுள்ள (உப்பு நீரை) முகந்து (நன்னீராக்கி) இனிய மழையாகப் பெய்யும் (அதுபோல) பண்பு அறிந்தோர் சால்பு-நற்பண்புகளை அறிந்தவரது செயலானது, மடன் உடையார் கோது அகற்றி மாண்புறுத்தல்-அறியாமை யுடையவரது குற்றங்களைப் போக்கி நற்குணங்களைப் பொருந்துவித்தலும், ஏமம் படைத்து ஆக்கல்-(அவர்கட்கு) காவலாக வேண்டியவற்றை உண்டாக்கிப் பெருக்குவதும் ஆம். (க-து) மேகம் கடல் நீரையுண்டு மழை பொழிந்து உலகத்தாரைக் காப்பது போலச் சான்றோர்களும் மக்களிடத்துள்ள அறியாமையை யகற்றி அவரைக்காப்பது கடமையாகும்.
|