பக்கம் எண் :


27

முதலிற் போக்குவது நலம் என்று (பெரியோர்) கருதமாட்டார். கன்று அமர்ந்து கடிப்ப தீ பால் கலுழும்-தனது கன்று விரும்பி மடியைக் கடித்தாலும் (தாய்ப்பசு) இனிய பாலினைச் சொரியும், ஒன்றவுணராதார் ஊங்கு நீள் மோத்தை-பொருந்த வாழ்வதனை, யறியாத மக்களைப் பார்க்கினும் நீண்ட ஆட்டுக் கடாக்கள் (நல்லனவாம்.)

(க-து) உதவி செய்பவரிடத்துக் குற்றம் இருப்பினும் பொறுக்கவேண்டும். தமககுத் தீங்கு செய்யினும் அவர்க்குத் தீங்கு செய்ய நினைக்கலாகாது. கூடிவாழ வேண்டும்.

(வி-ம்) இடிவிழுந்தாற் சிலர்க்குத் தீமை விளையும் அது கருதி மழையை வெறுப்பவர் இலர் என்ற வுவமையால் பலர்க்கும் பல நன்மைசெய்யும் ஒரு மனிதனிடம் ஒரு குற்றம் இருப்பினும் அக்குற்றத்தை மட்டும் நோக்கி அவனை வெறுத்தல் தகாது என்னும் நீதி விளங்கிற்று. கன்று கடித்த தென்று தாய் நினையாது பால் கொடுப்பது போலத் தம்மை அறியாத மாந்தர் வருத்தினும் பெரியோர் அதனைப் பொறுத்து நன்மையையே செய்வர் என்ற கருத்துத் தோன்ற "முடிப்பருயிரெனினும் முன்னார்" என்றார். எனினும் என்பது தமக்குத் தோன்றினாலும் என்ற பொருளைத் தந்தது. முடிப்பர் உயிர் எனினும் என்பது அத்தகையக் கொடுஞ் செயலாகத் தோன்றினாலும் என்பதை விளக்கி நின்றது. முன்னார்-நினையார், அவர் புரியும் தீய செயலையே தாமும் அவர்க்குப் புரிவதற்கு நினையார் என வருவித்துக் கொள்க. ஆட்டுக்கடாக்கள் ஒன்று மற்றொன்றை முட்டினால் மீண்டும் அதனை அது முட்டும். எத்தனைதரம் முட்டினும் விட்டுப் போகாமல் மேலும் மேலும் முட்டித் துன்பத்தை விளைவித்துக் கொண்டே நிற்கும். இது ஆட்டுக் கடாவின் செயல். ஒன்ற வுணராதார் செயல் இதனினும் மேற்பட்டது என்று கூறுவார் நீண்மோத்தை யூங்கு என்றார். பிறர்க்குத் துன்பம் விளையாமல் வாழ்வது நல்வாழ்வு என்பது கருத்து.

(கு-பு) காயார், முன்னார் என்பன பலர்பாற் படர்க்கையெதிர்மறை வினைமுற்று, கலுழும்-என்பது பிறவினைப் பொருளைத் தந்தது. ஏ-அசை. நீள்+மோத்தை=நீண்மோத்தை எனத் திரிந்தது.