பக்கம் எண் :


30

எல்லாரும் சுற்றத்தாராவார், உடைமை கோல் இன்றி அங்கு சென்றக்கால் சுற்றம் உடையவரும் வேறுபடும்-செல்வமாகிய ஊன்றுகோலின்றி ஆங்குச் சென்றால் சுற்றத்தார் என்ற உரிமையுடையவரும் வேறுபட்டு அயலார் போலாவார்.

(க-து) செல்வமுடையவரை எல்லாருஞ் சேர்ந்து தம் சுற்றமாகவே கொண்டாடுவர். ஆதலாற் செல்வத்தை இடைவிடாது வருந்திச் சேர்க்கவேண்டும்.

(வி-ம்) அறாது உடைமை ஈட்டல் எனவும் யாண்டும் உறுதுணையாம் எனவுங் கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது. உடைமையறாது ஈட்டல் என்பதற்கு, செல்வந் தன்னைவிட்டு நீங்காமலிருக்கும்படி ஈட்டுக எனவும் பொருள் கூறலாம். யாண்டும்-எக்காலத்தும் என்றும் பொருள் கொள்ளலாம். சென்றக்கால் என்ற குறிப்பினால் அயலூர் என்பது வருவிக்கப்பட்டது. "ஆகா தெனினு மகத்துநெய் யுண்டாயிற், போகா தெறும்பு புறஞ்சுற்றும்-யாதும், கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி விடாஅ ருலகத் தவர்," என்ற நாலடிப்பா இங்கு ஒப்பு நோக்கற்பாலது. செல்வரைக் கண்டால் யாவரும் சுற்றத்தார்போலச் சூழ்ந்து திரிவதும் வறியரைக் கண்டாற் சுற்றத்தாரும் நோக்காமற் கைவிட்டு நீங்குவதும் உலகியல்பு. அவ்வுலகியல்பு தோன்ற ஊரெல்லாம் சுற்றம் என்றும், சுற்றம் உடையவரும் வேறுபடும் என்றும் கூறினர். உடைமையை ஊன்றுகோலாக உருவகஞ் செய்தவர் வாழ்வாகிய நல்வழி என உருவகஞ் செய்யாது விடுத்தலால்இஃது ஏகதேசவுருவகம். செல்வமாகிய ஊன்றுகோலின்றிச் சென்றால் வாழ்வாகிய நல்வழி கடக்க வியலாது என்று கொள்க. சுற்றம் உடையவர்-சுற்றமாகிய உரிமையுடையவர் எனக்கொள்க. தாய் தந்தை உடன் பிறந்தோர் முதலியவர் சுற்றத்தாராவர். அவ்வகைச் சுற்றத்தாரும் அயலாராக வேறுபடுவர் என்பது. அறஞ்சாரா நல்குர வீன்றதாயானும் பிறன்போல நோக்கப் படும். என்ற குறட்பாக்கூறும் பொருளும் அது.