(கு-பு) ஈட்டல்-அல்விகுதி பெற்ற வியங்கோள். சென்றக்கால்-கால்விகுதிபெற்ற வினையெச்சம். சுற்றம் என்பதற்கு ஆவர் என்ற பயனிலை வருவிக்க. இன்றி என்பது இன்று என விகாரமாய் நின்றது. வேறுபடும் என்ற பயனிலை சுற்றம் என்பதற்குத்தான் பொருந்தும். உடையவரும் என வந்ததால் இது வழுவமைதி எனக்கொள்க. 13. | மண்ணீ ருடையார் வழங்கிச் சிறுகாலைத் | | தண்ணீரார் சாரு நிலஞ்சார்வ-ருண்ணீர் | | அறியி னருஞ்செவிலி மாண்பொருளே வெண்ணீர்ச் | | சிறியரையு மேர்ப்படுத்துஞ் செய். |
(சொ-ள்) மண் நீர் உடையார்-நிலமும் நீர்நிலைகளும் ஆகிய செல்வங்களையுடையவர்; வழங்கி-அவற்றை வறியவர்க்குக் கொடுத்து (அறம்புரிந்து) சிறுகாலை-விரைவில், தண்நீரார் சாரும் நிலம் சார்வர்-அருட்குணமுடைய ஆன்றோர் எய்தும் மேலுலகத்தினை அடைவர், உள் நீர் அறியின்-உண்மைத் தன்மையாய்ந்தால், மாண்பொருளே அருஞ் செவிலி-மாட்சிமையுடைய செல்வப் பொருளே (அந்நற்பண்பு நற்செயல்களை வளர்க்கும்) அருமையான செவிலித்தாயாகும்; வெள்நீர் சிறியரையும் ஏர்படுத்தும்-(அப்பொருள்) வெள்ளிய தன்மையுடைய சிறியோரையும் பெருமைப் படுத்தும், செய்-(ஆதலால் அப்பொருளை) ஈட்டுக. (க-து) செல்வமுடையவர்கள் அறம்புரிந்து மேலோர் எய்தும் துறக்கத்தினையும் அடைவர். செல்வமே நற்பண்புகளை வளர்பபது. ஆதலால் நீ செல்வத்தினையே தேடுக. (வி-ம்) மண் என்பது நன்செய், புன்செய், வீடு, தோட்டம் முதலியவற்றை யுணர்த்திற்று. நீர் என்பது கிணறு, குளம், முதலியவற்றையுணர்த்திற்று. நன்செய் குளத்து நீர் பாய்ந்து விளைவது. புன்செய் நீர் வேண்டாதது, மழையால் விளையும் இயல்புடையது. தோட்டம் கிணற்று நீரால் விளையும் இயல்புடையது. வீடுகளிலும் கிணறு அமைந்திருக்கும். புன்செய் ஒன்று தவிர மற்ற நிலங்களில் நீர் இருக்கும் ஆதலால் மண்ணீர் ஆகிய செல்வமெனப் பொருள்படுமாறு மண்ணீர் எனக் கூறினர். மண்ணீர் என்பது மண்ணும் நீருமாகிய செல்வத்தை யுணர்த்தியது.
|