பக்கம் எண் :


37

கின்ற பொருளாகிய புதையலுடன் சேர்ந்து, கோல்தாங்கிக் கோடும் அரசிற்கு உரியாமே-செங்கோல் தாங்கி நீதி தவறி நடக்கும் அரசுக்கு உரியனவாமோ (உரியனவாகா செங்கோலரசர்க்கே யுரியனவாம்.)

(க-து) சுங்கப் பொருளும் அறிவில்லார் தேடிய பொருளும், குடிகள் ஆறிலொன்று கொடுக்கும் பொருளும் நிலத்திற் புதைத்த பொருளும் செங்கோலரசர்க்கே சேரும்.

(வி-ம்) கால்-சக்கரத்தின் பெயர்; அது ஆகுபெயராய் வண்டியை யுணர்த்தியது. நிலத்தின் மீது செல்லும் வண்டியும் நீர் மீது செல்லுங் கப்பலும் பல பொருள்களை யோரிடத்திருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு போவதா யிருப்பின் அவற்றிற்கு அரசர் வரி விதிப்பர். அதனைச் சுங்கம் என்பது மரபு. அறிவில்லார் தேடி வைத்த பொருள் அனுபவிக்காமலேயிருந்து பின் ஒரு காலத்தில் நெறிவழி யொழுகாதது குறித்துத் தண்டனையாக அரசர்பாற் போய்ச் சேரும். ஆறிலொன்று வாங்குவது அரசன் கடமையாக முன்னிருந்ததால் அதனை 'நலப் பொருள்'' என்றார். தொல்புவிக்கீழ் ஆடும் பொருள் என்றது பூமியின் கீழ்ப் புதைத்து வைத்திருக்கும் பொருளை. பெருஞ் செல்வம் உடையவர் பூமிக்குக் கீழ் ஆழமாக வெட்டி இருப்புத்தூண் நட்டு இருப்புச் சங்கிலி பூட்டிப் பெருங்கலங்களிற் பொன்னை நிறைத்துத் தொங்கவிட்டு இருப்பது வழக்கம். ஆதலால் ஆடும்பொருள் என்றார். உரியாரின்றிப் புதையல் காணப்படின் அது அரசனுக்கு உரியதாகும் என்பது. மேற்குறித்த நால்வகையாக வரும் பொருளும் கடுங்கோலரசனுக்கு உரியவாகா என்பது கருத்து. செங்கோலரசற்கே யுரியதாகும் என்பதை மறுதலைப்படக்கூறி விளக்கினர். நீதியரசே நிலைத்து நிற்கும்; கோடும் அரசு நீடுதலின்று என்ற கருத்தினால் உரியாமே என்றார். உரியனவாகா என்பதை அது விளக்கிற்று.

(கு-பு) கால் என்பதற்கு ஆல் உருபும் உம் என்பதும் சேர்க்க. கலத்தால் உம் சேர்க்க. உரிமை-இதில் மைவிகுதி கெட்டது; ஆம்+ஏ=ஆமே. ஏகாரம் வினாப் பொருளில் வந்தது. உரிமையாமோ என்பது பொருள். உரிமையாகா என்பது எதிர்மறை. ஏகாரம் இப்பொருளைக் காட்டியது.