18. | ஆம்போம் வினையா னணைவுற்ற பேர்வெறுக்கை | | யோம்போம் பெனமறை கூறத் தலைப்பெயலென் | | ஏம்போ மெனவரைத லீட்டுநெறி தேராமை | | சாம்போழ் தலறுந் தகைத்து. |
(சொ-ள்) வினையான் ஆம் போம்-(பொருள்) முற்பிறப்பிற் செய்த வினை காரணமாக உண்டாகும் பின்பு அழிந்துபோகும், அணைவுற்ற பேர் வெறுக்கை-(அப்பொருளுக்கு) சேர்ந்த பெயர் வெறுக்கையாம், ஓம்பு ஓம்பு என மறை கூற-ஒழித்துவிடு ஒழித்துவிடு என்று வேதங்கள் கூறவும், தலைப்பெயல் என்-அப்பொருளைச் சேர்ப்பது, என்ன காரணம், ஏம்போம்எனவரைதல்-(பொருளீட்டி) களிப்படையோம் நாம் என்று கூறி அதனை நீக்குவது, ஈட்டு நெறிதேராமை-பொருள் சேர்த்து இன்பம் துய்க்கும் வழியறியாமையே யாகும், சாம்போழ்து அலறும் தகைத்து-அது இறக்கும்போது வருந்தியழுந் தன்மை யுடையது. (க-து) ஆம் போது ஆம் போம்போது போம் என்று எளிதாகச் செல்வத்தைக் கருதி இளமைப் பருவத்தில் தேடாமலிருந்தால் இறக்கும்போது மனைவி மக்களைக் குறித்து வருந்த வேண்டியது நேரிடும். (வி-ம்) வினை என்பது நல்வினை, தீவினையிரண்டினையும் உணர்த்தியது. நல்வினையால் ஆம் தீவினையாற்போம் எனக் கூட்டுக. "இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுல்ந்தக்கால்" என்ற நாலடியின் பொருளும் அது. அறிஞர் வெறுத்தலால் செல்வத்திற்கு "வெறுக்கை" என்ற பெயர் வந்தது என்பது குறிப்பு. ஓம்பு என்பது காத்தலுக்கும் கூறலாம். ஆயினும் இடம் நோக்கி ஒழி என்று பொருள் கூறப்பட்டது. அடுக்கு வினாவைக் குறித்து நின்றது. விரைவில் ஒழித்துவிடு என்பது குறிப்பு. இவ்வாறு மறை கூறவும் நாம் தலைப்பெயலென் ஏம்போம் என்பது ஒருவர் கூற்று. தன்மைப் பன்மையாகக் கூறினர் எனக் கொள்க.
|