பக்கம் எண் :


40

(க-து) உலகத்தில் மக்களையளந்து உயர்வு தாழ்வுகாட்டுவதற்குக் கட்டளைக் கல்லாக இருப்பது செல்வம். செல்வமில்லாதவ ருடம்பு காட்டுப் பசுப்போல வெறுக்கப்படுவதாம்.

(வி-ம்) பட்டாங்கு என்பது உள்ளபடியே என்ற பொருளைத் தந்தது. தூயராய், உரியராய் என்று பின் உம்மை கூட்டுக. ஒட்டு-ஒப்பு என்ற பொருளைத் தந்தது. இன்றி என்பது இன்று எனத்திரிந்தது. கட்டளை என்பது, பொன்னை உரைத்து மாற்றுப்பார்க்கும் ஒரு கல். உரையாணியும் ஆம். "சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி, துலையல்லார் கண்ணுங் கொளல்" என்பது குறள். செல்வம், எத்துணை பெருகியுள்ளதோ அத்துணை உலகத்தார் மதிக்கப்படுவார். செல்வம் இன்றெனில் மதிக்கப்படார். எனவே அவர் பெருமையை யளந்துகாட்டுவது செல்வம் என்பது தோன்ற "வெறுக்கை கட்டளையாம்" என்றார். கட்டளைக்கல்லாற் பொன்னின் மாற்றுக்கண்டு உயர்வு தாழ்வு கூறுவதுபோல உலகமக்களின் உயர்வு தாழ்வு அவரவர் படைத்திருக்கும் செல்வத்தையே நோக்கி அறியலாம் என்பது கருத்து. மைஆ-கரியபசு. மை என்ற அடைமொழி காட்டுப் பசுவைக் குறித்தது. இப்பசு நாவினால் நக்கினால் இன்பமாகப் தோன்றும் என்பதும் நக்கிய இடத்திலுள்ள தசை குருதி முழுவதும் அதன் வாய்க்குட் சென்று பின்னர் மிகுந்த துன்பத்தை விளைக்கும் என்பதும் நூலிற்கண்ட உண்மையாம். "ஆமாபோ னக்கி யவர்கைப் பொருள்கொண்டு" என்பது நாலடியார். காட்டுப் பசுவிற் பால் கறப்பதும் இயலாது. அதனைக்கண்டவர் அதன் பண்பினை நினைந்து வெறுப்பதுபோலச் செல்வமில்லாதவன் உடம்பு கண்டவரும் வெறுப்பர் எனக்கொள்க.

(கு-பு) பழிச்சல்+குபழிச்சற்கு. ஒட்டு+இன்று+உயர-ஒட்டின்றுயர என்ற குற்றியலுகரம் கெட்டுப் புணர்ந்தது. வெறுக்கை என்பது கைவிகுதிபெற்ற தொழிற்பெயர். வெறுத்தல். இது ஆகு பெயராய்ச் செல்வத்தையுணர்த்தியது. நிற்க என்பது செய என்ற வர்பாட்டு வினையெச்சம்; ஆம் என்ற முற்றைக்கொண்டு முடிந்தது.