மங்கையை, ஆணம் முழுக்கு ஆட்டி-பலவகைக் கூட்டுப் பொருள்களைப் பூசி நீராட்டுவித்து (அலங்கரித்து) மன்றின் முன் கைத்தா குழீஇ கூடல் என்னே-அவையோர் முன் கைப்பற்றிக் கொண்டுபோய்ப் புணர்தல் என்ன வியப்பு! செறிகாமம் பூட்டும் இயல் மாரன்-நெருங்கிய காமத்தை (ஆடவர் மகளிர் என்ற இரு திறத்தார்க்கும்) பூட்டுகின்ற இயல்புடைய மன்மதனுடைய, மன்அரசால் உலகு மாண்பூப்பு-நிலைபெற்ற அரசாட்சியினால் மண்ணுலகமானது மாண்பாக உண்டாவது. (க-து) அழுக்குடம்புடைய பெண்ணை ஒருவன் அலங்கரித்து மணம் புரிந்து வாழ்கிறான். அதனால் உலகம் மேலும் மேலும் பெருகி நிலைத்து நிற்கிறது. (வி-ம்) எலும்பு, நரம்பு, தோல், குருதி, மூளை, கொழுப்பு, தசை இவைகளை யொழுங்குட னிறுத்திக்கட்டுவது, எவராலும் முடியாத செயலாதலால் இது சிறப்புடையது என்பது தோன்ற "யாத்தசீர்" என்றார். சீர்-சிறப்பு என்ன சிறப்பு, எனின் யாத்த சிறப்பு என்க. சீர் உடம்பு, அழுக்கு உடம்பு எனக் கூட்டுக: "குடருங் கொழுவுங் குருதியு மென்பும், தொடரு நரம்போடு தோலு-மிடையிடையே, வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள், எத்திறத்தா ளீர்ங்கோதை யாள்" என்று மங்கையரைப் பழித்தபடி காண்க. அழுக்குடைய மங்கையரைப் புனைந்து பூமாலை சூட்டிப் புணர்ந்து இன்பந் துய்ப்பது மன்மதன் மூட்டிய காமமேயன்றி வேறில்லை என்பார், "என்னே" என வியந்தார். காமத்தின் இழிவு தோன்றியது அவ்வியப்பால். மன்மதன் அரசாட்சியால் மக்கள் விளைவு பெருகுகிறது; அவன் அரசின்றெனில் இவ்வளவு மக்கட்கூட்டம் உலகத்தில் காணமுடியாது; அரசுதான் இதற்குக் காரணம் என்பார் "அரசால் மாண் பூப்பு உலகு" என்றார். மாரன் ஆசையை உண்டாக்குகிறான். அதனால் அழுக்குடைய மங்கையரைக் கூடுகின்றனர். அதனால் மக்கட் பேறு மிகப்பெருகி உலகம் பொலிகின்றது என்று காரணம் விளங்குவது காண்க. ஆணம்-குழம்பு-வாசனைக் கூட்டுக்காயிற்று.
|