பக்கம் எண் :


54

(க-து) கழல்-ஆடவர்க்குரியது; தொடி-மகளிர்க்குரியது; கழல் தொடியார் எனவே கழலும் தொடியும் அணிந்தவர் என அவ்விருவரையும் குறிப்பாக உணர்த்திற்று. "ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப" என்றும் பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோ, டுருவுநிறுத்த காமவாயில், நிறையேயருளே யுணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே" என்றும் தொல்காப்பியம் கூறுவதால் "மிக்காரை யார் வரைவர்" என்றார். இருவரும் ஒத்தவராயமைந்தால் அது வாழ்க்கைத் துணையென மதிக்கப்படும் என்பது கருத்து. வாழ்க்கைத் துணையாக மதித்து மணம்புரிந்த காதலர் இருவரினும் "தோற்றாரே வெல்வர் எனக்கொள்க. காதலன், காதலியாகிய இருவரிடத்தும் ஊடல் நிகழ்வதுண்டு. "யானூடத்தானுணர்த்த யானுணராவிட்டதற்பின், தானூட யானுணர்த்தத் தானுணரான்" என்று தலைவி கூறுவது சான்றாம். ஊடியிருந்த தலைவியைத் தலைவன் இன்சொற்கூறி யிரந்து வேண்டுவன், அது போலவே தலைவன் ஊடியிருப்பின் தலைவியும் வேண்டுவள் இருவரும் பின் புலவிநீங்கிக் கூடுவர். இவ்வாறு ஊடல் நிகழ்ந்து பின் கூடுவது மிகவும் இன்பம் பயக்கும் என்பது அறிஞர் கண்டவுண்மை. ஊடியிருந்த இருவரில் ஒருவர்க்குக் காமம் மிகின் அவர் பிணக்கு நீங்கி முதலிற் கூடுதற்கு மனங்கொள்வர். அவரையே தோற்றவர் என்று கொள்க. அவர் புணர்ச்சி விருப்ப மிகவும் உடையர் ஆதலால் அவரே புணர்ச்சிப்போரில் வெல்வார் என்பது குறிப்பு. வள்ளுவரும் "ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும் கூடலிற் காணப்படும்" என்றார். இதனுண்மையாய்க. அவரது தலையளியும் கூடலும் அவர்வென்றமையை யுணர்த்துஞ் சான்றாம் என்பார் "போற்று அளி கூடல் கரி" என்றார்.

(கு-பு) தோற்றார்: வினையாலணையும் பெயர். ஏகாரம்: தேற்றப்பொருளில் வந்தது. வெல்வர்: பலர்பாற் படர்க்கை எதிர்கால வினைமுற்று. போற்று அளிகூடல்:உம்மைத் தொகைகள். யார்: வினாக்குறிப்பு. காடு+யானை-கோட்டியானை: நெடிற்றொடர் இரட்டித்துப் பின் யகரம்வர இகரம் பெற்றுப் புணர்ந்தது.