பக்கம் எண் :


55
30. காதல் விரிநிலத் தாரா வகைகாணார்
சாதனன் றென்ப தகைமையோர்-காதலும்
ஆக்கி யளித்தழிக்குங் கந்தழியின் பேருருவே
நோக்கிலரை நோவ தெவன்.

(சொ-ள்) விரிநிலத்து-பரந்த மண்ணுலகத்தில், காதல் ஆராவகை காணார்-காதலின்பம் (எப்போதும்) நிறையாதிருக்கும் விதத்தையறியாதவர்கள்; சாதல் நன்று என்ப-(காதலின்பத்தைக் கருதி வாழ்வதினும்) சாவதே நல்லது என்று சொல்லுவார்; தகைமையோர் காதலும் ஆக்கி அளித்து அழிக்கும் கந்தழியின் பேர் உருவே-நற்பண்புடையோரது காதலின்பமும் படைத்துக் காத்துத் துடைக்கும் கடவுளின் பெருமையாகிய வடிவமேயாகும்; நோக்கிலரை நோவது எவன்-(இவ்வுண்மையை) ஆராய்ந்து அறியும் அறிவில்லாதவர்களைக் குறித்து வருந்துவது என்னபயன்.

(க-து) காமவின்பத்தின் இயல்பு அறியாதவர் இறந்து பேரின்பம் அடைவதே நல்லது என்பார், ஆராய்ந்து பார்த்தால் இச்சிற்றின்பமும் பேரின்பத்திற்கு வழியாகும். ஆதலால் சிற்றின்பத்தினைத் துய்த்து வாழ்வதே நல்லது.

(வி-ம்) காதலின்பம் மனத்தில் நிறைவுற்று இனி வேண்டாம் என்று வெறுக்கும் அளவுக்கு வராது; இன்னும் துய்க்கவேண்டும் துய்க்கவேண்டும் என்றே மனங்கருதும்; ஆதலால் அவ்வின்பம் ஆராவியற்கையுடையது என்றும்; அதனியற்கையையறிந்தவர் முடிவுவரை காத லின்பத்தினை யடைந்தே வாழக் கருதுவர்; என்றும் இறக்கக் கருதார் என்ற கருத்தும் விளங்க "காதல் ஆராவகை காணார் சாதல் நன்று என்ப" என்றார். நற்பண்புடையோர் காதல், தீது விளைத்தலின்றி இன்பத்தையே தந்து மக்களைப் படைத்துக் காத்து முடிவில் தாமும் இறந்து மக்களும் இறந்துவிடுவதற்குக் காரணமாயிருத்தலால் அத்தகையோர் காதலும் கந்தழியின் பேருருவமேயாகும் என்றார். கந்தழி-பற்றுக் கோடற்றது; கடவுள். கடவுள் படைக்கின்றார் மனிதர் முதலிய பலவுயிர்களை.