காதலும் மகப்பேற்றை விளைக்கிறது. காக்கின்றார் கடவுள் பல்லுயிர்களை. காதலும் பெற்றமக்களைக் காக்கின்றது. பின்னர்க் கடவுள் எல்லாவுயிர்களையும் அழிக்கின்றார். பிறந்த மக்களையும் காதல்;அழிக்கின்றது. கடவுள் நேர்வந்து உயிர்களையழிக்கின்றனரா? இல்லை. பலகாரணங்களால் உயிர்கள் அழிவதைக் கடவுள் அழிப்பதாகக் கூறுகின்றோம்; அதுபோலக் காதலாற் பிறந்த குழந்தைகள் அழிவதையும் காதல் அழித்ததாகக் கூறுகிறோம். இவ்வொப்பினால் தகைமையோர் காதலும் கந்தழியின் பேருருவும் ஒக்குமெனக் கொள்க. ஆராயாதவர்கள் சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் கூறுவர். ஆராய்ந்தால் சிற்றின்பமே தான் பேரின்பத்தையும் கொடுக்கும் என்பது கருத்து.
(கு-பு) காதல், சாதல்: தொழிற் பெயர்கள். விரிநிலத்து: வினைத்தொகை. ஆரா:ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். காணார்:எதிர்மறை வினையாலணையும் பெயர். சாதல்+நன்று வருமொழிநகரம் னகரமாகத் திரிந்து நிலைமொழியீறு கெட்டு நின்றது. என்ப:பலர்பாற் படர்க்கை வினைமுற்று.
அளகு மளிநாகைப் பேண வணியார்
அழகரிவை வீழ்முயக்கை யண்ணாத்-தளியாளர்
பெற்ற பிறக்கெறிந்து புத்தாய பெட்டுழலும்
பெற்றியர் பெட்ட கழுது.
(சொ-ள்) அளகும்அளி நாகைப் பேண-பெண்பறவைகளும் அன்பினால் இளமையான குஞ்சுகளைப் பேணிவளர்க்கவும், அணிஆர் அழகு அரிவை வீழ்முயக்கை அண்ணா தளியாளர்-(அதனைக்கண்டும்) நகைநிறைந்த இயற்கையழகுடைய பெண்கள் விருப்பமான புணர்ச்சியின்பத்தைக் கருதாத கோயிலையிடமாகக் கொண்ட துறவிகள்; பெற்ற பிறக்கு எறிந்து புத்தாய பெட்டு உழலும் பெற்றியர்-தாம்பெற்ற பொருள்களைப் புறம்பாக எறிந்துவிட்டுப் புதிதாகிய பொருள்களை விரும்பி உழன்று திரியும் இயல்புடையவராவார்; பெட்டகழுது-(அவர்கள் மேலுமேலும் உணவைமட்டும்) விரும்பிய பசாசு ஆவர்.