பக்கம் எண் :


57

(க-து) மங்கையரின்பத்தைக் கருதாத மனமுடைய துறவிகள் பெற்றபொருளை யெறிந்துவிட்டு வேறுபொருள் தேடியுழலும் பித்தர் போன்றவர். பசாசு போன்றவர்கள் என்றுங் கூறலாம்.

(வி-ம்) பெண்பறவை தம் குஞ்சுகளைப் பேணுவது கண்டால் இவ்வாறு நாமும் குழந்தைகளைப் பெறுவிப்பதற்குப் பெண்களை மணந்து இல்லறத்தில் வாழவேண்டும் என்ற கருத்து மனிதரெல்லார்க்கும் உண்டாகும், அதனைக்கண்டும் புணர்ச்சியை விரும்பாதவர் மனையை விரும்பாமற் கோவிலையே தம் மனையாகக் கருதிவாழ்வார் என்ற குறிப்புத்தோன்ற, "அண்ணாத்தளியாளர்" என்றார். தளி-கோயில், ஆளர்-ஆள்பவர், கோவிலையிடமாகக் கொண்டவர் என்பது. துறவிகள் ஊருக்குட் சென்று பிச்சைவாங்கியுண்டு கோவிலில் உறங்குவது பெரும்பான்மையும் வழக்கம். மங்கையரோடு மருவும் இன்பம் உலகிலிருக்கவும் இதனை நீக்கிப் பேரின்பம் ஒன்று உண்டென்றும் அது குறித்து விரதம் நோன்பு பூண்டு கடவுளையே கருதி இல்வாழ்வை வெறுத்துப் பேரின்ப வாழ்வை விரும்பியிருப்பது தம்கையிற் கிடைத்த பொருள்களை யெறிந்துவிட்டுப் புதுப் பொருள் தேடியுழல்வார் செயலாகும் என்று தோன்ற, 'பெற்ற... பெற்றியர்' என்றார். மக்கள் இல்லறத்தை விரும்பிப் பின் துறவு பூண்பதே மேல் என்பது கருத்து. கழுது-பேய், பசாசு, உணவைமட்டும் விரும்பிய பசாசு என்று பொருள்படும்படி பெட்டகழுது என்றார். கனி காய் கிழங்குகளைத் தின்று மலைகளில் வசிப்பவர்களே உண்மைத் துறவிகள் என்பது இவர் கருத்துப்போலும்.

(கு-பு) அழகு+அரிவை: குற்றியலுகரங் கெட்டு நின்றது: இரண்டனுருபும் பயனும் தொக்கதொகை. வீழ்முயக்கு: வினைத்தொகை. அண்ணா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பெற்ற: பலவின்பால் வினையாலணையும் பெயர், புத்தாய என்பதும் அது.