32. | ஒத்த வுரிமையளா வூடற் கினியளாக குற்ற மொருஉங் குணத்தளாக்-கற்றறிஞர்ப் பேணுந் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து நாணுந் தகையளாம் பெண். |
(சொ-ள்) ஒத்த உரிமையள்ஆ-(பிறப்பு முதலியவற்றால்) ஒத்த உரிமையுடையவளாகியும், ஊடற்கு இனியவள் ஆ-ஊடலில் இனிமையுடையவளாகியும், குற்றம் ஒரூஉம் குணத்தள் ஆ-குற்றங்கள் நீங்கிய நற்குணங்களையுடையவளாகியும், கற்ற அறிஞர் பேணும் தகையள் ஆ- (பலநூல்களையும்) கற்ற அறிவுடையவரைப்பேணும் தன்மையுடையவளாகியும், கொண்கன் குறிப்பு அறிந்து நாணும் தகையள் பெண்ஆம்-கணவனுடைய குறிப்பினை அறிந்து (அதற்கியைய) நாணுகின்ற தன்மையுடையவளே பெண் ஆவள்.
(க-து) ஒத்தவுரிமையும், ஊடலினிமையும், குற்ற நீங்கிய குணமும், கற்றவரைப் பேணும் கருத்தும், கணவன் குறிப்பறிந்து நாணும் பண்பும் உடையவளே இல்லறத்திற்குத் தக்க பெண்ணாவள்.
(வி-ம்) ஒத்தவுரிமையாவது "பிறப்பே குடிமை யாண்மை யாண்டொடு உருவு நிறுத்த காம வாயில், நிறையே அருளே யுணர்வொடு திருவென முறையுறக் கிளந்த வொப்பினது வகையே" என்ற தொல்காப்பியர் கருத்தின்படி பத்து வகையிலும் ஒத்த வுரிமையாம். ஊடலினினிமையாவது, "இடனறிந்தூடி இனிதினுணரு மடமொழி மாதராள் பெண்" என்ற நாலடியாரிற் கூறியபடியும், "உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது, மிக்கற்றா னீள விடல்" என்ற குறட் கருத்தின்படியும், ஊடும் அமையம் அறிந்து ஊடி உணரும் அமையம் அறிந்து உணர்வதாம். கலவி மேலெழுந்த காதலன் குறிப்பறிந்து உணர்தலே இனிமையாம். புலவி நீட்டித்தல் இன்னாது எனக் காண்க.